ஊத்தங்கரை அருகே பரபரப்பு சம்பவம் நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்: தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கத்தியால் சரமாரி குத்தி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாதேஷ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (27). இவர்களுக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் உள்ளனர். சமத்துவபுரத்தில் கணவரின் வீட்டருகே வசித்துவரும் மிதுன் சக்கரவரத்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் தகாத உறவாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாதேஷ் மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதன்காரணமாக கணவரை பிரிந்த தீபா, குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியில், பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனிடையே, குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாதேஷ், கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். கணவர் இறந்தபிறகு நிரந்தரமாக தீபா தந்தை வீட்டில் வசித்தார். அப்போது மிதுன் சக்கரவர்த்தி அடிக்கடி கஞ்சனூர் வந்து தீபாவுடனான உறவை அதிகப்படுத்திக்கொண்டுள்ளார். இந்த விஷயம் அவரது வீட்டினர் அனைவருக்கும் தெரியும். இந்த நேரத்தில் அப்பகுதியில் கிடைக்கும் கூலிவேலைக்கு தீபா சென்று வந்தார். தென்னந்தோப்புகளில் தேங்காய் பொறுக்கி போடும் வேலைக்கும் சென்றார். அப்போது தேங்காய் வெட்ட வந்த சூளகிரியை சேர்ந்த கவுதம் (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருடனும் நெருங்கிப்பழகி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்த விவரம் மிதுன் சக்கரவர்த்திக்கு தெரிந்ததும் தீபாவிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 8ம் தேதி முதல், போச்சம்பள்ளி சிப்காட்டில் உள்ள தனியார் எலக்ட்ரிக் பைக் தயாரிக்கும் கம்பெனியில் உள்ள கேண்டீனில் தீபா வேலைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், வேலை முடிந்து தீபா வீட்டிற்கு புறப்பட்டார். சிறிது நேரத்தில் தனத காதலன் கவுதமுக்கு போன் செய்த தீபா, தன்னை 2பேர் பின்தொடர்ந்து வருவதாக பதற்றத்துடன் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பின், மீண்டும் கவுதம் போன் செய்த போது, தீபா போனை எடுத்துள்ளார். ஆனால், அவரது அலறல் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம், விரைந்து சென்று பார்த்தபோது, கஞ்சனூர் முருகன் கோயில் அருகில், தீபா உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே தீபா உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கொலை நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். கொலை தொடர்பாக, கவுதமிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தீபா சமத்துவபுரத்தில் கணவருடன் வசித்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த கூலித்தொழிலாளி மிதுன்சக்கரவர்த்தியுடன் உள்ள தகாத உறவு பற்றியும் தெரிவித்தார். இதனால் போலீசார் மிதுன் சக்கரவர்த்தி பற்றி விசாரித்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். மிதுன் சக்கரவர்த்திதான் தனது நண்பருடன் வந்து தனது காதலியை கொலை செய்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஊத்தங்கரை அருகே பரபரப்பு சம்பவம் நள்ளிரவில் டூ வீலரில் வந்த காதலியை சரமாரியாக குத்திக் கொன்ற வாலிபர்: தன்னை கழற்றி விட்டதால் நண்பருடன் சேர்ந்து வெறிச்செயல் appeared first on Dinakaran.

Related Stories: