சென்னை: எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா? என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அளித்த பேட்டி:
ஏழை, எளிய மக்களுக்குக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்ட தலைவர் எம்ஜிஆர். 1000 ஆண்டுகள் ஆனாலும் சரி, யாராலும் தொட்டுப்பார்க்க முடியாத வகையில் அதிமுக தழைத்து ஓங்கி வளரும். எம்ஜிஆரை யாருடனும் ஒப்பிடமுடியாது.
வரலாற்றில் முத்திரை பதித்தவர். சாதி, சமயம் பார்க்காதவர். வேறுபாடு பார்க்காதவர். மத ரீதியாக அரசியல் செய்யாதவர். இதை அண்ணாமலையால் ஏற்றுக்கொள்ள முடியுமா? இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என எல்லோருமே எம்ஜிஆரை போற்றினர். பிரதமர் மோடியை அவ்வாறு போற்றுகிறார்களா? சமூக நீதி என்ற அடிப்படையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை எம்ஜிஆர் தான் கொண்டுவந்தார். இன்றைக்கு பழங்குடியினர், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பயன்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு அதிமுக தான் காரணம்.
ஆனால் மதத்தால் பிரிவினை வாதம் செய்துகொண்டிருப்பது தான் பாஜவின் வேலையாக இருக்கிறது. இதில் சமநிலை எங்கே இருக்கிறது? எனவே எந்த நிலையிலும் எம்ஜிஆரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட முடியாது. மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாமாகத்தான் இதை பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
எம்ஜிஆர் அதிமுகவின் சொத்து கிடையாது: – அண்ணாமலை
தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கல்வியை தரமாக வழங்க வேண்டும் என்பற்காகவே ஆல் பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையேயான ஒற்றுமை குறித்த எனது அறிக்கைக்கு அ.தி.மு.க. தலைவர்களே தனிப்பட்ட முறையில் என்னிடம் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர். எம்.ஜி.ஆரை இந்தியாவின் சொத்தாக பார்த்ததால்தான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர் அ.தி.மு.க.வின் ரத்தினா கிடையாது. எம்.ஜி.ஆரை விரும்புபவர்கள் அதிமுகவில் மட்டுமில்ல, பாஜ, திமுகவிலும் இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., அதிமுகவின் சொத்து கிடையாது. அவர் மக்களின் சொத்து என்றார்.
The post மத அரசியல் செய்யாத எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா..? அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கடும் கண்டனம் appeared first on Dinakaran.