சென்னை: திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை: ராயப்பேட்டையில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் என்றும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள். நமக்குள் இருப்பது சகோதர பாசம். எவ்வளவு சூழ்ச்சிகள் நடந்தாலும் தி.மு.க-வுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது. கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் மிலாடி நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இஸ்லாமியர்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பத்து தர்காக்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உலமாக்களின் ஓய்வூதியம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது நமது திராவிட மாடல் அரசு தான். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுப்பது தி.மு.க தான். சி.ஏ சட்டத்திற்கு எதிராக முதலாவதாக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது திமுக. பாஜக வெறுப்பை பரப்பி வருகிறது. திமுக இருக்கும் வரை பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் பலிக்காது.
சிறுபான்மை மக்கள் நலன்பற்றி கவலையில்லாமல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார் பழனிசாமி; திமுகவிற்கு இஸ்லாமிய பெருமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
