உசிலம்பட்டி: தேர்தல் பிரசாரத்துக்காக மாநிலம், மாநிலமாக சுற்றும் மோடி சமையல், வர்த்தக காஸ் கையிருப்பில் கவனம் செலுத்தவில்லை என தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டினார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சமையல் காஸ் தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் உணவகங்கள், டீக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இவர்களின் நிலை அறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சார அடுப்புகள் வாங்க மானியத்துடன் கடனுதவிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும், ஓட்டல்கள் மற்றும் டீக்கடைளில் இந்த அடுப்புகளை பயன்படுத்திக்கொள்ள ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 2 ரூபாய் தள்ளுபடி அறிவித்துள்ளார். ஆனால், ஒன்றிய அரசு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. சிலிண்டர்கள் கையிருப்பு இல்லை என்று கேட்டால், அதற்கு உரிய விளக்கம் அளிக்காமல், தட்டுப்பாடு ஏற்படாது என்கிறார்கள். இங்கு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் பிரச்னை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் பிரதமர் மோடி.
சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர் காரணம் என்று கூறலாம். ஆனால் ஒரு நாட்டின் சமையல் காஸ், பெட்ரோல், டீசல் போன்ற அதிக தேவையுள்ள பொருட்களின் கையிருப்பில் ஒன்றிய அரசு கவனம் செலுத்தவில்ைல. இதற்கு பதிலாக தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக பிரதமர் மோடி தமிழ்நாடு, கேரளம் என பல மாநிலங்களுக்கு தனது பிரசார பயணத்தை மேற்கொள்கிறார். இதுபோன்ற நடவடிக்கையால் இன்று மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
