பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மகாகும்பமேளாவில் டிரோன்கள் பறப்பதை தடுக்க நவீன கருவிகள்: உ.பி. அரசு நடவடிக்கை

மகாகும்ப நகர்: உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான மகாகும்பமேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்துவார் மற்றும் நாசிக் ஆகிய நான்கு நகரங்களில் உள்ள ஆற்றுப்படுகைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் நடக்கும் மகாகும்பமேளா மிகவும் புகழ் பெற்றது.

அதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகாகும்பமேளா 2025 ஆன்மீக நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதுமிருந்து 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி புதிதாக 1,575 பேருந்துகள் வாங்க மாநில பாஜ அரசு முடிவு செய்துள்ளது. மேலும் 3,700 ஹெக்டேர் பரப்பளவில் கண்காட்சி ஒன்றை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாகும்பமேளா 2025ஐ முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை(13ம் தேதி) திரிவேணி சங்கமத்தில் நடந்த சிறப்பு பூஜைகளில் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை முன்னிட்டு கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க மாநில அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உத்தரபிரதேச காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் திவேதி கூறியதாவது, “மகாகும்பமேளா நிகழ்ச்சிக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கண்காட்சி நடைபெறும் திடலுக்கு அருகே கடந்த வௌ்ளிக்கிழமை முதல் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன கருவிகள் அனுமதியின்றி பறந்த இரண்டு டிரோன்களை செயலிழக்கச் செய்தது. அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மகாகும்ப நகர் பகுதியில் முன்அனுமதியின்றி டிரோன்கள் பறக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்தார்.

The post பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மகாகும்பமேளாவில் டிரோன்கள் பறப்பதை தடுக்க நவீன கருவிகள்: உ.பி. அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: