புதுடெல்லி: பாமக கட்சியில் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோருக்கிடையே உள்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது இந்த நிலையில், போலி ஆவணம் கொடுத்து பா.ம.க வை அபகரித்ததாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,‘‘அங்கீகரிக்கப்படாத கட்சியை பொறுத்தவரை தேர்தல் ஆணையம் கட்சியின் உள் விவகாரங்களில் தலையிட்டு முடிவெடுக்க முடியாது.
குறிப்பாக பாமக கட்சியில் இதே நிலை நீடித்தால் சின்னத்தை முடக்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படலாம். இருப்பினும் கட்சி உரிமை கோரல் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுகி உங்களது கோரிக்கையை வைக்கலாம் என்று கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது
அதில், பாமக கட்சி மற்றும் மாம்பழ சின்னம் ஆகியவற்றை பொய்யான தகவல்களையும் போலியான ஆவணங்களையும் தாக்கல் செய்து அன்புமணி பெற்றுள்ளார் எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் மனுவை தள்ளுபடி செய்தது. மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக ராமதாஸ் தாக்கல் செய்து இருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
