தொகுதி பங்கீடு திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தை

புதுச்சேரி இந்தியா கூட்டணியில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்று முன்தினம் நடந்தது. காங்கிரஸ் தரப்பில் பேச்சுவார்த்தை குழு தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக தரப்பில் தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி., திமுக மாநில அமைப்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சிவா, மாநில அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கூட்டணிக்கு தலைமை, தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் திமுக தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் எம்பி கூறுகையில், ‘‘காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்வதற்காக பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மற்ற விவரங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு தெரிவிக்கப்படும்’’ என்றார். காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் கூறுகையில், ‘‘எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பேசவில்லை.

நாங்கள் இரு கட்சியினரும் ஒத்துழைத்து ஒன்றாக நிற்பது என பேசியிருக்கிறோம். தொகுதி பங்கீடு சீக்கிரம் முடிவாகும். புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை யார்? என்பதை கட்சியின் தலைமை அறிவிக்கும். காங்கிரசில் ஜூனியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது குறித்து, எங்கள் தலைவர் ராகுல்காந்தி தான் அறிவிப்பார்’’ என்றார்.  இந்நிலையில், புதுவை சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்த நிலையில், திமுக-காங்கிரஸ் 2ம் கட்ட பேச்சுவார்த்தை 16ம் தேதி (இன்று) நடைபெறுகிறது என்று புதுவை மாநில திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்து உள்ளார்.

Related Stories: