பெங்களூரு: ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் இன்று நடக்கிறது. பாஜ கூடுதலாக ஒரு வேட்பாளரை சுயேச்சையாக நிறுத்தியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 2 வேட்பாளரை நிறுத்தியுள்ளது. பிஜு ஜனதா தளத்தின் ஒரு வேட்பாளரை காங்கிரஸ் ஆதரிக்கிறது. இதனால் பாஜ குதிரை பேரம் நடத்தி காங்கிரசில் உள்ள எம்எல்ஏக்களில் ஒரு சிலரை கட்சி மாறி ஓட்டு போட வைக்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் தங்கள் எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் காங்கிரஸ் அலுவலக பொறுப்பாளர்கள் சிலரை பெங்களூருவை அடுத்த ராம்நகரம் ரிசார்ட்டில் தங்க ஏற்பாடு செய்தது.
இந்த பொறுப்பை கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் கவனித்துக்கொண்டார். கர்நாடகா ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை நான்கு பேர் நேற்று ரகசியமாக சந்தித்தனர். இதில் சுரேஷ் என்பவர் ராம்நகரத்தை சேர்ந்த உள்ளூர் பாஜ பிரமுகர் ஆவார். இவர்கள் ஆன்லைன் ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.5 கோடி தருவதாகவும் இன்று நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் பாஜ வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் காசோலை ஒன்றையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். ஒரு எம்எல்ஏவை நேரடியாக வெளியே அழைத்து சென்று பேரம் பேசியுள்ளனர். உடனே அந்த எம்எல்ஏ குதிரை பேரத்துக்கு உடன்படமாட்டோம் என்று கூறி ரிசார்ட்டுக்கு திரும்பியுள்ளார். நான்கு பேர் பயன்படுத்திய காசோலை புத்தகம் பறிமுதல் செய்யப்பட்டு பிடதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சுரேஷ் உள்பட இருவரை கைது செய்து மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் கூறியதாவது, ‘ உள்ளூர் பிரமுகருடன் சேர்ந்து 3 பேர் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்தியுள்ளனர். ஆபரேஷன் தாமரை சதிக்காக பாஜ இவர்களை அனுப்பிவைத்துள்ளது. கைதான இருவர் போலீசிடம் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். ’என்றார்.
