அசாமின் கவுகாத்தியில் ரூ.2,092 கோடி மதிப்பிலான சுகாதார திட்டங்களை தொடங்கி வைத்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அசாமின் சுகாதாரத்துறை சீர்குலைந்த நிலையில் இருந்தது. ஏனெனில் காங்கிரஸ் தனது தலைவர்களின் குடும்பத்தின் நிதி நலனுக்காக மட்டுமே கவனம் செலுத்தியது. 2016 வரையிலும், 15 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் சுகாதார பட்ஜெட்டில் இருந்து மட்டும் ரூ.150 கோடியை சுருட்டினர்.
பிறக்காத 9 லட்சம் குழந்தைகளுக்காக சிகிச்சைக்காகவும் கட்டப்படாத 390 அங்கன்வாடி மையங்களுக்காகவும் இந்த தொகை செலவிடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி அமைந்த பிறகு மாநிலத்தின் மருத்துவ வசதிகளை குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு இணையான நிலைக்கு உயர்த்தப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவம், கல்வி ஆகிய இரு துறைகளிலும் அசாம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் அசாம் சுகாதாரத்துறை முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
