சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20; 28 பந்துகளில் நூறு… உர்வில் பட்டேல் ஜோரு: திரிபுராவை துவம்சம் செய்த குஜராத் வீரர்

இந்துார்: சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் திரிபுரா அணிக்கெதிராக ஆடிய குஜராத் வீரர் உர்வில் பட்டேல், வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதம் விளாசி, உலகின் 2வது அதிவேக சத சாதனையை நிகழ்த்தி உள்ளார். மத்தியப்பிரதேசத்தின் இந்துார் நகரில் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் திரிபுரா அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியது.  முதலில் ஆடிய திரிபுரா அணி வீரர்கள், குஜராத் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. கடைசியில் 8 விக்கெட் இழப்புக்கு திரிபுரா அணி 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து, 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் வீரர்கள் களமிறங்கினர்.

துவக்க வீரர் ஆர்யா தேசாய் 24 பந்துகளில், 2 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன் குவித்தார். மற்றொரு துவக்க வீரர் உர்வில் பட்டேல் துவக்கம் முதலே திரிபுரா பவுலர்களின் பந்துகளை அதகளப்படுத்தினார். 28 பந்துகளில் 100 ரன் விளாசிய அவர், கடைசியில் 35 பந்துகளில் அவுட்டாகாமல் 113 ரன் குவித்தார். இதில், 12 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதில், அவர் நொறுக்கிய சிக்சர், பவுண்டரிகள் மூலம் மட்டுமே 100 ரன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 10.2 ஓவர்களிலேயே குஜராத் அணி 156 ரன் குவித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்போட்டியில் அமர்க்களமாக ஆடிய உர்வில் பட்டேலின் 28 பந்தில் 100 சாதனை, டி20 வரலாற்றில் 2வது அதிவேக சாதனையாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன், கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு போட்டியில் சைப்ரஸ் அணிக்கெதிராக ஆடிய எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான், 27 பந்தில் 100 ரன் குவித்தது, உலகின் முதல் அதிவேக சாதனையாக நீடிக்கிறது.

The post சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20; 28 பந்துகளில் நூறு… உர்வில் பட்டேல் ஜோரு: திரிபுராவை துவம்சம் செய்த குஜராத் வீரர் appeared first on Dinakaran.

Related Stories: