இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 65 சதவீதம் வாக்குப்பதிவு: உடனடியாக வாக்கு எண்ணிக்கை துவக்கம்

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவானது. தேர்தலில் அதிபருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21ம் தேதி நடைபெற்றது. இதில், 55.89 சதவீத வாக்குகளுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவரது தேசிய மக்கள் சக்திக்கு அப்போதைய நாடாளுமன்றத்தில் வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவது கடினம் என்பதால் அதிபராக பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தை கலைத்து திசநாயக உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

21 கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து அதிபரின் தேசிய மக்கள் சக்தி போட்டியிட்டது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 13,421 வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சுமார் 90ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இன்று காலை அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகும்.

இதற்கிடையில், புதிய நாடாளுமன்ற கூட்டம் நவம்பர் 21ம் தேதி கூட்டப்படும் என இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்ற மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 225. இவர்களில் 196 பேர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகள் அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் எஞ்சிய 29 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற குறைந்தது 113 இடங்கள் அவசியமாகும். நாடாளுமன்றத்தில் அதிபரின் கட்சிக்கு அல்லது அணிக்கு பெரும்பான்மை இல்லை எனில் மசோதாக்களை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்படும். எனவே அதிபர் அநுர குமார திசநாயக கூட்டணி பெரும்பான்மை பெற வேண்டியது அவசியமாகும்.

The post இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் 65 சதவீதம் வாக்குப்பதிவு: உடனடியாக வாக்கு எண்ணிக்கை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: