2வது மகளிர் ஒருநாள் போட்டி பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: கேப்டன் சோபி அமர்க்களம்

அகமதாபாத்: இந்திய மகளிர் அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 76 ரன் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுத்தது. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன் குவித்தது. கேப்டன் சோபி டிவைன் அதிகபட்சமாக 79 ரன் (86 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். சூஸி பேட்ஸ் 58 ரன் (70 பந்து, 8 பவுண்டரி), ஜார்ஜியா பிளிம்மர் 41 ரன், மேடி கிரீன் 42 ரன் விளாசினர்.

இந்திய பந்துவீச்சில் ராதா யாதவ் 10 ஓவரில் 69 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். தீப்தி ஷர்மா 2, சைமா தாகூர், பிரியா மிஷ்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 260 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஸ்மிரிதி மந்தனா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஷபாலி வர்மா 11, யஸ்டிகா 12, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24, ஜெமிமா 17, தேஜல் ஹசப்னிஸ், தீப்தி ஷர்மா தலா 15, அருந்ததி 2 ரன்னில் வெளியேற, இந்தியா 27 ஓவரில் 108 ரன்னுக்கு 8 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், ராதா யாதவ் – சைமா தாகூர் இணைந்து கடுமையாகப் போராடினர். இருவரும் 9வது விக்கெட்டுக்கு70 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். சைமா 29, ராதா 48 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 47.1 ஓவரில் 183 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நியூசி. பந்துவீச்சில் லீ டஹுஹு, சோபி டிவைன் தலா 3, ஜெஸ் கெர், ஈடன் கார்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆல் ரவுண்டராக அசத்திய சோபி ஆட்ட நாயகி விருது பெற்றார். 76 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 1-1 என சமநிலை ஏற்படுத்திய நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

The post 2வது மகளிர் ஒருநாள் போட்டி பதிலடி கொடுத்தது நியூசிலாந்து: கேப்டன் சோபி அமர்க்களம் appeared first on Dinakaran.

Related Stories: