113 ரன் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா: முதல் முறையாக தொடரை கைப்பற்றி நியூசிலாந்து சாதனை

புனே: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில் 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 259 ரன் குவிக்க, இந்தியா 156 ரன்னில் சுருண்டது. 103 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்திருந்தது. பிளண்டெல் 30, பிலிப்ஸ் 9 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

பிளண்டெல் 41 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 255 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கிளென் பிலிப்ஸ் 48 ரன்னுடன் (82 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 24 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 4, ஜடேஜா 3, அஷ்வின் 1 விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது இந்தியா. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் இணைந்து துரத்தலை தொடங்கினர்.

ரோகித் 8 ரன் மட்டுமே எடுத்து சான்ட்னர் சுழலில் யங் வசம் பிடிபட இந்தியா அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. அடுத்து ஜெய்ஸ்வால் உடன் இணைந்த கில் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, இருவரும் 2வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். கில் 23 ரன் ஏடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் டேரில் வசம் பிடிபட்டார். டி20 போல அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 41 பந்தில் அரை சதம் அடித்தார்.ஜெய்ஸ்வால் 77 ரன் (65 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), ரிஷப் பன்ட் ரன் அவுட்/டக் அவுட், விராத் கோஹ்லி 17 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்தது.

சர்பராஸ் கான் 9 ரன்னில் வெளியேற, ஓரளவு தாக்குப்பிடித்த வாஷிங்டன் சுந்தர் 21 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 37 ஓவரில் 167 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், ஜடேஜா – அஷ்வின் இணைந்து ஸ்கோரை உயர்த்தப் போராடினார். இருவரும் 8வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தனர். அஷ்வின் 18 ரன் எடுத்து சான்ட்னர் சுழலில் பலியாக இந்திய அணியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது. எனினும், 9வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த ஆகாஷ் தீப் பொறுப்புடன் தடுப்பாட்டத்தில் இறங்கி விக்கெட் சரியாமல் பார்த்துக்கொள்ள, ஜடேஜா கொஞ்சம் கொஞ்சமாக ஸ்கோரை உயர்த்தினார். இதனால் மீண்டும் சற்று நம்பிக்கை துளிர்த்தது.

ஆனால், ஆகாஷ் தேவையில்லாமல் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு (24 பந்து, 1 ரன்) விக்கெட்டை தானம் செய்தார். இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்ட நிலையில், கடைசி பேட்ஸ்மேனாக உள்ளே வந்த பும்ரா தன் பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். அஜாஸ் சுழலில் சிக்சர் அடிக்க முயற்சித்த ஜடேஜா (42 ரன், 84 பந்து, 2 பவுண்டரி) எல்லைக் கோட்டருகே சவுத்தீயின் அற்புதமான கேட்ச்சில் அவுட்டாக இந்தியா 2வது இன்னிங்சில் 245 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (60.2 ஓவர்). பும்ரா 10 ரன்னுடன் (4 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சில் சான்ட்னர் 29 ஓவரில் 2 மெய்டன் உள்பட 104 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். அஜாஸ் படேல் 2, பிலிப்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 113 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன், இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. முதல் இன்னிங்சில் 7, 2வது இன்னிங்சில் 6 என மொத்தம் 13 விக்கெட் வீழ்த்தி அசத்திய சான்ட்னர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்தில் நவ.1ம் தேதி தொடங்குகிறது.

* முடிவுக்கு வந்த 12 ஆண்டு சாதனை
இந்திய அணி கடந்த 2012 முதல் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 தொடர்களை வென்று உலக சாதனை படைத்திருந்தது. வேறு எந்த அணியும் தொடர்ச்சியாக 10 தொடருக்கு மேல் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புனேவில் நேற்று நியூசிலாந்திடம் அடைந்த தோல்வியால் இந்திய அணியின் சாதனைப் பயணம் முடிவுக்கு வந்தது.
* முன்னதாக, 2012ல் இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தது.
* ஆஸ்திரேலியா 1992-93 சீசனில் இருந்து 2008-09 வரை 28 தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
* இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து, இதற்கு முன்பாக நாக்பூர் (1969), மும்பை (1988) என 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது.
* 2 இன்னிங்சிலும் 6+ விக்கெட் வீழ்த்திய 3வது நியூசிலாந்து பவுலர் என்ற பெருமை சான்ட்னருக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே ரிச்சர்ட் ஹாட்லீ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேனிலும் (1985), டேனியல் வெட்டோரி வங்கதேசத்துக்கு எதிராக சட்டோகிராமிலும் (2004) இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.
* புனே டெஸ்டில் சான்ட்னர் 157 ரன்னுக்கு 13 விக்கெட் வீழ்த்தியதும், டெஸ்ட் போட்டிகளில் நியூசி. பவுலர்களின் 3வது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. ஹாட்லீ (15/123), அஜாஸ் படேல் (14/225) முதல் 2 இடங்களில் உள்ளனர்.
* நடப்பு சீசனில் (2024) இந்தியா சந்தித்த 3வது டெஸ்ட் தோல்வி இது. ஜனவரியில் இங்கிலாந்திடம் தோற்ற இந்தியா, தற்போது நியூசி.க்கு எதிராக 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
* ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் சந்தித்த 4வது டெஸ்ட் தோல்வி இது. கபில், அசாருதீனும் தலா 4 தோல்விகளை சந்தித்துள்ளனர். இந்த வரிசையில் எம்.ஏ.கே.பட்டோடி முதலிடம் வகிக்கிறார் (9 தோல்வி).
* புனே டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் 37 விக்கெட் கைப்பற்றினர். டெஸ்ட் வரலாற்றில் இது 3வது இடத்தை பிடித்துள்ளது. பல்லெகெலேவில் இலங்கை – இங்கிலாந்து மோதிய டெஸ்டில் (2018) ஸ்பின்னர்கள் 38 விக்கெட் கைப்பற்றிய நிலையில், சட்டோகிராமில் வங்கதேசம் – ஆப்கான். இடையே நடந்த டெஸ்டிலும் (2019) 38 விக்கெட்கள் சுழலில் மூழ்கின.
* வாஷிங்டன் சுந்தர் 115 ரன்னுக்கு 11 விக்கெட் வீழ்த்தியது, இந்திய அணி தோல்வியை சந்தித்த டெஸ்டில் 2வது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. முன்னதாக, ஜவகல் ஸ்ரீநாத் பாகிஸ்தானுக்கு எதிராக ஈடன் கார்ட்னில் நடந்த டெஸ்டில் (1999) 132 ரன்னுக்கு 13 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அந்த போட்டியில் இந்தியா 46 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
* 2024ல் சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஜெய்ஸ்வால் 1056 ரன் குவித்துள்ளார். இந்திய பேட்ஸ்மேன்களில் இதுவே அதிகபட்சமாகும். முன்னதாக, குண்டப்பா விஸ்வநாத் 1979 சீசனில் 1047 ரன் எடுத்துள்ளார்.
* டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் 2000+ ரன் மற்றும் 200 விக்கெட் எடுத்த 4வது வீரர் என்ற பெருமை ஜடேஜாவுக்கு கிடைத்துள்ளது. இயான் போத்தம் (இங்கிலாந்து), கபில் தேவ் (இந்தியா), ஸ்டூவர்ட் பிராடு (இங்கி.) வரிசையில் ஜடேஜா இணைந்துள்ளார்.

The post 113 ரன் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா: முதல் முறையாக தொடரை கைப்பற்றி நியூசிலாந்து சாதனை appeared first on Dinakaran.

Related Stories: