வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு

மிர்பூர்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 106 ரன்னுக்கு சுருண்ட நிலையில், தென் ஆப்ரிக்கா 308 ரன் குவித்து ஆல் அவுட்டானது. வெர்ரைன் 114, முல்டர் 54 ரன், பியட் 32 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 202 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 2ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன் எடுத்திருந்தது. ஹசன் ஜாய் 38 ரன், முஷ்பிகுர் 31 ரன்னுடன் 3ம் நாளான நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இருவரும் மேற்கொண்டு தலா 2 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். எனினும், மெஹிதி ஹசன் மிராஸ் – ஜாகிர் அலி இணைந்து 6வது விக்கெட்டுக்கு உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடுமையாகப் போராடிய இந்த ஜோடி 138 ரன் சேர்த்து அசத்தியது. ஜாகிர் அலி 58 ரன் விளாசி பெவிலியன் திரும்பினார். 3ம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்துள்ளது. மிராஸ் 87 ரன், நயீம் ஹசன் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் இருக்க, வங்கதேசம் 81 ரன் மட்டுமே முன்னிலை பெற்றிருப்பதால் இப்போட்டியில் தென் ஆப்ரிக்காவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று பரபரப்பான 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

The post வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: