தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி மோதல் சத்தீஸ்கர் 500 ரன் குவிப்பு

கோவை: தமிழ்நாடு அணியுடனான ரன்ச்ஜி கோப்பை எலைட் டி பிரிவு லீக் ஆட்டத்தில், சத்தீஸ்கர் அணி முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சத்தீஸ்கர் அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் ரிஷப் திவாரி 46, ஆயுஷ் பாண்டே 124 ரன் விளாசி அவுட்டாகினர். அனுஜ் திவாரி 68, சஞ்ஜீத் தேசாய் 52 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

அனுஜ் 84 ரன் எடுத்து விஜய் ஷங்கர் பந்துவீச்சில் வெளியேற, கேப்டன் அமன்தீப் கேர் 4, சஞ்ஜீத் 82 ரன் எடுத்து அஜித் ராம் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஏக்நாத் கேர்கர் – அஜய் மண்டல் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்தது. ஏக்நாத் 52, அஜய் 64 ரன், சுபம் அகர்வால் 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஜிவேஷ் பட், ஆசிஷ் சவுகான் தலா 4 ரன் எடுத்து சித்தார்த் பந்துவீச்சில் கிளீன் போல்டாக, சத்தீஸ்கர் முதல் இன்னிங்சில் 500 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரவி கிரண் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தமிழ்நாடு பந்துவீச்சில் அஜித் ராம் 4, மணிமாறன் சித்தார்த் 3, முகமது, ஷங்கர், பிரதோஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்துள்ளது. சுரேஷ் லோகேஷ்வர் 7 ரன்னில் அவுட்டானார். கேப்டன் நாராயண் ஜெகதீசன் 6, அஜித் ராம் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. மும்பை 450: அகர்தலாவில் திரிபுரா அணியுடன் நடக்கும் எலைட் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை முதல் இன்னிங்சில் 450 ரன் குவித்தது. 2வது நாள் முடிவில் திரிபுரா 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன் எடுத்துள்ளது.

* விசாகப்பட்டணத்தில் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆந்திரா முதல் இன்னிங்சில் 344 ரன் குவிக்க, இமாச்சல் 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்துள்ளது.

* கர்நாடாகா அணியுடன் பாட்னாவில் மோதும் பீகார் அணி 143 ரன்னுக்கு சுருண்ட நிலையில், கர்நாடகா விக்கெட் இழப்பின்றி 16 ரன் எடுத்துள்ளது.

* சர்வீசஸ் அணியுடன் ஸ்ரீநகரில் நடந்த ரஞ்சி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சர்வீசஸ் 71 மற்றும் 132; ஜம்மு மற்றும் காஷ்மீர் 228.

* புதுச்சேரி அணிக்கு எதிராக ஐதராபாத் 8 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. புதுச்சேரி 24/2.

The post தமிழ்நாடு அணியுடன் ரஞ்சி மோதல் சத்தீஸ்கர் 500 ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: