போதைப்பொருள் விற்பனை செய்த ஐடி ஊழியர், மாணவன் சிக்கினர்

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமின் என்ற விலை உயர்ந்த போதைப்பொருளை சிலர் பயன்படுத்துவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அயனாவரம் சிக்னல் அருகே 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் 5 கிராம் மெத்தமெட்டமின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.

இது சந்தை மதிப்பில் சுமார் ரூ.55 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அயனாவரம் கே.கே.நகர் 3வது தெருவைச் சேர்ந்த பால சண்முகம் (20), ரஞ்சித் (26) மற்றும் புதுப்பேட்டை ஆச்சாரி தெருவை சேர்ந்த அருண் லட்சுமணன் (19) என்பது தெரிய வந்தது. இதில் பால சண்முகம் லிப்ட் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். ரஞ்சித் தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

அருண் லட்சுமணன் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஓட்டேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரிடம் இந்த மெத்தபெட்டமினை ரூ.3 ஆயிரத்துக்கு ரஞ்சித் வாங்கி அதனை அவரது உறவினரான பால சண்முகத்திடம் கொடுத்துள்ளார். பால சண்முகம் புதுப்பேட்டையைச் சேர்ந்த அருள் லட்சுமணனிடம் அதனை கூடுதல் விலைக்கு விற்றுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post போதைப்பொருள் விற்பனை செய்த ஐடி ஊழியர், மாணவன் சிக்கினர் appeared first on Dinakaran.

Related Stories: