கோவை வடவள்ளியை சேர்ந்த பேராசிரியர் காமராஜ், தனது 2 மகள்களை ஈஷா யோகா மையத்தில் இருந்து மீட்டுத்தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். ஈஷா யோகா மையம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாக விசாரித்த உச்சநீதிமன்றம், ஈஷா மையத்திற்கு எதிராக நிலுவையில் உள்ள புகார்கள், எப்ஐஆர்கள், முந்தைய நிலுவை வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு போலீசாருக்கு தடை இல்லை எனத் தெரிவித்தது. பல்வேறு நிலைகளில் தொடர்ந்து ஈஷா யோகா மையம் மீது புகார்கள் குவிந்து வரும் நிலையில், மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன், மதுரை அண்ணா நகர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் மனுவில் கூறி இருப்பதாவது:கடந்த அக்.18ம் தேதி ஒரு ஆங்கில நாளிதழில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த குற்றங்கள் குறித்த நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில், கோவை மாவட்ட போலீசார் தாக்கல் செய்துள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த ஒரு சிறுவன் ஈஷா யோகா மையத்தில் தாக்கப்பட்டு, தற்கொலை எண்ணத்திற்கு ஆளாக்கப்பட்டார். ஹோம் ஸ்கூலில் படித்த சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பல குற்றங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த புகாரில் உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்வதும் போலீசாரின் சட்டப்படியான கடமை என ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. எனவேதான் நான் புகார் தெரிவிக்கிறேன். நிறுவனர் ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பின்னர் வக்கீல் வாஞ்சிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஈஷா யோகா மையத்தில் 6 பேர் மாயமானதுடன், 7 பேருக்கு சந்தேக மரணம் நடந்துள்ளது. இப்படி 15 ஆண்டுகளாக நடந்த பல்வேறு குற்றத் தகவல்களை கோவை போலீசார் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையாக அளித்துள்ளனர். ஐதராபாத்தில் 2 பெண்கள், ஈஷா யோகா மையத்தில் உள்ள ஹோம் ஸ்கூலில் படிக்கும், தங்கள் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஒரு தாய், தனது ஏழு வயது பெண் குழந்தையை ஆடையின்றி காலையில் எழுந்து பிரார்த்திக்கும்படி மையத்தினர் வற்புறுத்துவதாகவும், தனது மகள் பலமுறை ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து ஈஷா யோகா மையத்திற்கு தெரிவித்ததில், தவறிழைத்தவர் உயர்ந்த குடும்பத்துக்காரர் எனக்கூறி நடவடிக்கை எடுக்கவில்லை. போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் துவங்கி ஆயுள் தண்டனை வரை விதிக்கும் இக்குற்றத்திற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.
ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நிகழ்வுகள் மர்மமாக இருக்கிறது. அங்கே ரகசிய சுடுகாடு இருக்கிறது. எத்தனை பேர் புதைக்கப்பட்டனரோ? நில ஆர்ஜிதம், காலாவதியான மருந்து துவங்கி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருப்பது வரை பல குற்றங்கள், பாலியல் குற்றங்களும் நடந்துள்ளன. வழக்குகளை தானே முன்வந்து எடுக்கும் நீதிமன்றங்களும் ஏன் இவ்விஷயத்தில் மவுனமாக இருக்கிறது. பிரதமர் துவங்கி பலரும் அங்கு வருகின்றனர். அங்கே 8 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஒரு சாமியாரிடம் ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. இந்துக்களின் கட்சி எனச் சொல்லி வரும் பாஜவினர் ஏன் இது குறித்து வாய் திறக்கவில்லை. ஜக்கி வாசுதேவை பாதுகாக்கிறார்கள். மதத்தின் போர்வையில் குழந்தைகளை சீரழிக்கலாம், எதையும் செய்யலாம் என்பதை ஏற்க முடியாது. ஈஷா யோகா மையத்தில் நடந்து வரும் அத்தனை குற்றங்களுக்கும் தீர்வு காண நீதிமன்றத்தை அணுகி, மக்களை திரட்டி கடைசி வரை போராடுவோம். இவ்வாறு தெரிவித்தார்.
* ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நிகழ்வுகள் மர்மமாக இருக்கிறது.
* அங்கே ரகசிய சுடுகாடு இருக்கிறது. எத்தனை பேர் புதைக்கப்பட்டனரோ?
* வழக்குகளை தானே முன்வந்து எடுக்கும் நீதிமன்றங்களும் ஏன் இவ்விஷயத்தில் மவுனமாக இருக்கிறது.
* ஒரு சாமியாரிடம் ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது.
The post கோவை ஈஷா யோகா மையத்தில் பாலியல் வன்கொடுமை; ஜக்கி வாசுதேவ் மீது போக்சோவில் நடவடிக்கை: மதுரை போலீசில் வக்கீல் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.