வாட்ஸ் அப்பில் தம்பதியின் அந்தரங்க வீடியோ ‘லீக்’: பணம் கேட்டு மிரட்டிய 2 பேருக்கு வலை


நாகர்கோவில்: குமரி அருகே தம்பதியின் அந்தரங்க வீடியோவை வாட்ஸ் அப் மூலம் செல்போனில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய 2 டிரைவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் டிரைவர்களாக மிதுன் (26), சங்கீத் ஆகியோர் பணியாற்றி வந்தனர். மேலும், தம்பதியின் குடும்பத்தோடு நெருக்கமாக பழகி வந்தனர்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தம்பதிக்கும், மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், 2 டிரைவர்களும் வேலைக்கு வராமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், தம்பதியின் செல்போன் எண்ணுக்கு பெயர் ெதரியாத நம்பரில் இருந்து ஒரு முறை பார்த்துவிட்டு அழியக்கூடிய வீடியோ வந்தது. அந்த வீடியோவில் தம்பதி தனிமையில் இருக்கும் அந்தரங்க காட்சிகள் இருந்தன. தம்பதியின் பக்கத்து வீட்டுக்காரரின் செல்போனுக்கும் இதே அந்தரங்க வீடியோ சென்றது. அவர், வீடியோ அனுப்பியது மிதுன், சங்கீத் தான் என்பதை அறிந்து தம்பதியிடம் கூறினார். இதற்கிடையே தம்பதிக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர்கள், அந்தரங்க வீடியோவை வைத்து தம்பதியை மிரட்டி ரூ.10 லட்சம் வரை கேட்டார்களாம். இதனால் அதிர்ந்து போன தம்பதி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான டிரைவர்கள் மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரை தேடி வருகின்றனர்.

வீடியோ எடுத்தது எப்படி?
மனைவியுடன் தனிமையில் இருப்பதை கணவர் தனது செல்போனில் வைத்திருந்தாராம். ஆனால் அந்த அந்தரங்க வீடியோ அந்த செல்போனில் இருந்து மிதுன் மற்றும் சங்கீத் ஆகியோரின் செல்போனுக்கு யார் அனுப்பினார்கள்? ஒருவேளை கணவர் செல்போனை தனியாக வைத்துவிட்டு சென்ற நேரத்தில் இருவரும் அதனை தங்களின் செல்போனுக்கு அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் வீட்டில் தம்பதிக்கு தெரியாமல் கேமராக்களை பொருத்தி வீடியோ எடுத்தார்களா எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏராளமான அந்தரங்க வீடியோக்கள்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மிதுன் இதுபோன்று ஏராளமான பெண்களிடம் பழகி அவர்கள் கவனிக்காதவாறு அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். டிரைவர்கள் இருவரும் பெண்களிடம் நைசாக பழகி வீடியோக்களை எடுத்து பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்துள்ளது.

The post வாட்ஸ் அப்பில் தம்பதியின் அந்தரங்க வீடியோ ‘லீக்’: பணம் கேட்டு மிரட்டிய 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: