மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பாஜ வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட திட்டம்


புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜ வேட்பாளர்கள் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20ம் தேதி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்தில் அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் நேற்றிரவு நடந்தது. பிரதமர் மோடி தலைமையில், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 100 இடங்களில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மகாயுதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையை நடத்தி விட்டு, மீதமுள்ள இடங்களுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி முடிவு செய்யும். இந்த கூட்டணி, பாஜ, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளை உள்ளடக்கியுள்ளது.

2 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன்படி, கூட்டணி கட்சி தலைவர்களுடன், ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர், ஒரு வாரத்திற்குள் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், 150க்கும் கூடுதலான இடங்களில் பாஜ போட்டியிட கூடும் என்றும் சிவசேனா 80 முதல் 85 இடங்களிலும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 இடங்களிலும் போட்டியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜவுடன் கூட்டணி இல்லை தனித்துதான் போட்டி; ராஜ்தாக்கரே
மகாராஷ்டிராவில் மக்களவை தேர்தலில் பாஜவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரம் செய்தவர் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே. 2006ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவை தொடங்கியவர். இந்துத்துவா மற்றும் மராட்டிய தேசியவாதத்தை தீவிரமாக முன்வைப்பவர் ராஜ்தாக்கரே. ஆனால் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனித்துதான் போட்டியிடும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்தாக்கரே கூறுகையில், ‘சட்டமன்ற தேர்தலில் இதர கட்சிகளை விட அதிகமான இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். அதேநேரத்தில் மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு பின்னர் அமையும் ஆட்சியில் நாங்களும் பங்கேற்போம். சுங்க கட்டணம் ரத்து என்பது எங்களது நீண்டகால கோரிக்கை. இதனை பாஜ கூட்டணி அரசு நிறைவேற்றி இருப்பது வரவேற்புக்குரியது’ என்றார்.

The post மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பாஜ வேட்பாளர்கள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: