மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக போராடி வென்றது ஆஸ்திரேலியா

ஷார்ஜா: ஷார்ஜா கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் காயம் அடைந்த ஆஷாவுக்கு பதிலாக ராதா சேர்க்கப்பட்டார். கிரேஸ், பெத் மூனி இணைந்து ஆஸ்திரேலிய இன்னிங்சை தொடங்கினர். பெத் மூனி 2 ரன் எடுத்து ரேணுகா பந்துவீச்சில் ராதா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜார்ஜியா முதல் பந்திலேயே டக் அவுட்டாக, இந்திய வீராங்கனைகள் உற்சாகம் அடைந்தனர்.

எனினும், கிரேஸ் – கேப்டன் தஹ்லியா ஜோடி உறுதியுடன் விளையாடி ஆஸி. ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 62 ரன் சேர்த்தனர். தஹ்லியா 32 ரன், கிரேஸ் 40 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஷ்லி கார்ட்னர் 6, எல்லிஸ் பெர்ரி 32 ரன், அனபெல் 10 ரன் எடுக்க, சோபி டக் அவுட்டானார். ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 151 ரன் குவித்தது. லிட்ச்பீல்டு 15 ரன், மேகான் ஷுட் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட், ஷ்ரேயங்கா, பூஜா வஸ்த்ராகர், ராதா யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து 9 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 54 ரன், தீப்தி சர்மா 29 ரன்எடுத்தனர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் அனபில் சதர்லாண்ட், ஷோபி மொலினெக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த தோல்வியால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா? இல்லையா என்பது உறுதியாகும்.

The post மகளிர் டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு எதிராக போராடி வென்றது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Related Stories: