முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது

வளசரவாக்கம்: சென்னை டி.பி.சத்திரம் மதீனா பள்ளிவாசல் பகுதியில், போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது பதற்றத்துடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது கையில் பெரிய பை ஒன்று இருந்தது. அதை சோதனை செய்தபோது முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய ஐம்பொன் சிலைகள் இருந்தன. விசாரணையில், ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த இர்ஷித் முகமத் (48), கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), டிபி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் எபினேசர் (30) என தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர், இந்த சிலைகள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சிலைகள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தொன்மை வாய்ந்தது என்பதும், தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் இருந்து எடுக்கப்பட்டது எனவும் தெரிய வந்தது. இதுகுறித்து டி.பி.சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, 3 பேரையும் கைது செய்து ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான 3 பேரும் இந்த சிலையை எங்கிருந்து கடத்தினர், யாரிடம் விற்க முயன்றனர், இதில் தொடர்புள்ள நபர்கள் யார் என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்: பைக்கில் வந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: