குழந்தைகளை விற்ற வழக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய தந்தை கைது: 2 புரோக்கர்கள் சிறையில் அடைப்பு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குழந்`தைகளை விற்ற வழக்கில் கைதாகி போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய தந்தையை இன்று காலை மடக்கி பிடித்து மீண்டும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைதான 2 புரோக்கர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 3 புரோக்கர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகேயுள்ள திம்பதியான்வளவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (25). கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியான இவரது மனைவி குண்டுமல்லி (23). இவர்களுக்கு 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருந்தனர். இவர்களில் 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்து விட்டன. குடும்ப வறுமையால் தவித்த சேட்டு, 2 பெண் குழந்தைகளை புரோக்கர்கள் மூலம், ஏற்கனவே விற்பனை செய்துள்ளார். தொடர்ந்து ஒரு ஆண் குழந்தையையும் விற்றுள்ளார். இந்நிலையில், குண்டுமல்லி மீண்டும் கர்ப்பமடைந்தார். அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு, ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையையும் விற்பனை செய்ய, சேட்டு முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, குழந்தைகள் விற்பனை செய்து கொடுக்கும் புரோக்கர்களான இடைப்பாடி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்முருகன் (46), ஆலச்சம்பாளையம் முனுசாமி (46) ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் விசாரித்ததில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு ஆண் குழந்தை தேவைப்படுவது தெரியவந்தது. இதையடுத்து அவரை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது, ₹1 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், முறைப்படி தத்து கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி வந்துள்ளார். அந்த நடைமுறைக்கு சேட்டு ஒத்து வராததால், சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முரளிக்கு தேவராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தை பிரசவித்த குண்டுமல்லி, கிராம செவிலியர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். மருந்து-மாத்திரை வழங்குவதற்காக சென்ற செவிலியர்களுக்கும், குழந்தையை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் சேட்டுவை பிடித்து விசாரித்ததில், அவர் ஏற்கனவே 3 குழந்தைகளை புரோக்கர்கள் மூலம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில் பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பேபி, எஸ்ஐ மலர்விழி ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து, குழந்தைகள் விற்பனை தொடர்பாக சேட்டு மற்றும் புரோக்கர்களான செந்தில்முருகன், முனுசாமி ஆகியோரை கைது செய்தனர். சேட்டு விடமிருந்த குழந்தையை மீட்டு, சேலத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த குண்டுமல்லியும் மீட்கப்பட்டு, சேலத்தில் உள்ள மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட சேட்டுவை, அவரது வீட்டிற்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது, திடீரென போலீஸ் பிடியிலிருந்து அவர் தப்பியோடி விட்டார். இந்நிலையில் இன்று காலை ஜலகண்டாபுரம் பகுதியில் சேட்டுவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இக்குழந்தை கடத்தல் தொடர்பாக மேலும் 3 புரோக்கர்களை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் சேட்டுவின் குழந்தைகளை விற்றது போல் வேறு யாருடைய குழந்தைகளையாவது விற்றுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் செந்தில்முருகன், முனுசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post குழந்தைகளை விற்ற வழக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய தந்தை கைது: 2 புரோக்கர்கள் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Related Stories: