பள்ளிப்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 70 சவரன் திருட்டு: கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரிப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே கொத்தகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலு (60). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். சாலையோரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டிக்கொண்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ஷியாமளா. தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டநிலையில் மகன் ஜெயசூர்யாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர் வெளியூர் சென்றுள்ளநிலையில் நேற்று காலை விஜயலு, தனது மனைவியுடன் கே.ஜி.கண்டிகையில் உள்ள உறவினர் இல்லத்தில் நடைபெற்ற சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வீட்டை பூட்டுவிட்டு சென்றுள்ளார்.

மாலை 5 மணியளவில் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 70 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயலு பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி டிஎஸ்பி கந்தன் மற்றும் போலீசார் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பள்ளிப்பட்டு அருகே பட்டப்பகலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 70 சவரன் திருட்டு: கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: