மாமல்லபுரம் அருகே மீனவ பஞ்சாயத்தாரால் பெண் ஊராட்சி துணை தலைவர் உட்பட 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: போலீசில் பரபரப்பு புகார்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே மீனவ கிராம பஞ்சாயத்தாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சிக்குட்பட்ட கொக்கிலமேடு மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது, மனைவி ராஜாத்தி. இவர், எடையூர் ஊராட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறார். கடந்த, சில மாதங்களுக்கு முன்பு கொக்கிலமேடு மீனவர் குப்பத்தில் மழைநீர் கால்வாய் அமைத்தது குறித்து மீனவ பஞ்சாயத்தாருக்கும், ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்திக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இது சம்பந்தமாக, மாமல்லபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், கொக்கிலமேடு மீனவர் பஞ்சாயத்தார் ஊராட்சி துணை தலைவர் ராஜாத்தி வெங்கடேசன் குடும்பத்தி‌னர் உள்ளிட்ட 7 குடும்பத்தினரை தண்டோரா போட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக செங்கல்பட்டு சப் – கலெக்டரிடம் ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தி உள்ளிட்டட 7 குடும்பத்தினர் அளித்த புகார் மனுவில், ‘நாங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக் கூடாது. ஊரில் நடக்கும் அனைத்து நல்லது, கெட்டது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து பங்கேற்க கூடாது. மீன்கள் விற்பனை செய்யக்கூடாது என மீனவர் பஞ்சாயத்தினர் கட்டுப்பாடு விதித்ததாக கூறி இருந்தனர்.

இதையடுத்து, கடந்த 23ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து செங்கல்பட்டு சப் – கலெக்டர் நாராயண சர்மா தலைமையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மீனவ கிராமத்தில் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. அதிகாரிகளை அலைக்கழிக்க வைக்கக் கூடாது. ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 7 குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை திரும்ப பெற வேண்டும். இதை, மீறி இருதரப்பும் பிரச்சனையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சப் – கலெக்டர் நாராயண சர்மா அனுப்பி வைத்தார். இந்த நிலையில், நேற்று ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜாத்தி வெங்கடேசன் உள்ளிட்ட 7 குடும்பத்தினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

அந்த புகார் மனுவில், நேற்று முன்தினம் இரவு நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள மின் விளக்குகளை திடீரென அனைத்து விட்டு எங்கள் வீடுகள் மீது கல்வீசி கடுமையான தாக்குதல் நடத்தினர். ஒருசிலர், அசிங்கமாக அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். கடலுக்கு மீன் பிடிக்க செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறோம். எங்கள், 7 குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி, வீடுகள் மீது கற்கள் வீசி அச்சுறுத்தல் ஏற்படுத்தி பயமுறுத்தி வரும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், ஊராட்சி துணைத் தலைவி ராஜாத்தியின் மகள் கல்லூரி மாணவியான மோனிஷா (20), என்பவரும் படிக்க முடியாமலும், கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். தன்னை ஒரு பெண் என்று கூட பார்க்காமல் அங்குள்ள சிலர் அசிங்கமாக பேசி வம்புக்கு இழுக்கின்றனர்’ என கூறப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக, மாமல்லபுரம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மாமல்லபுரம் அருகே மீனவ பஞ்சாயத்தாரால் பெண் ஊராட்சி துணை தலைவர் உட்பட 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: போலீசில் பரபரப்பு புகார் appeared first on Dinakaran.

Related Stories: