நில முறைகேடு புகாரில் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு: 3 மாதங்களில் அறிக்கை கேட்கிறது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம்

பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநரிடம் சமூக ஆர்வலர்கள் அனுமதி கோரினர். இதையேற்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். ஆளுநர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி முதல்வர் சித்தராமையா உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ‘முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த தடையில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்’. இதையடுத்து மூடா முறைகேடு குறித்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது.

நீதிபதி சந்தோஷ் கஜானனபட் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இந்த புகாரின் படி பல இடங்களில் தவறு நடந்துள்ளதற்கான முகாந்திரம் இருப்பது உறுதியாக இருப்பதால் முதல்வர் மீதான புகாரை விசாரணை நடத்த அனுமதி வழங்குகிறேன். மைசூரு மாவட்ட லோக்ஆயுக்தா போலீஸ் எஸ்பி டி.ஜே.உதேஷ் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்று 2024 டிசம்பர் 24ம் தேதிக்குள் தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்படும் போலீஸ் எஸ்பி சுதந்திரமாக தனது விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டார். இதனால் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, முதல்வர் சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கு இரண்டாவது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

* சித்தராமையா மீது எப்ஐஆர்
முதல்வர் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா போலீஸ் எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள லோக்ஆயுக்தா எஸ்பிக்கு, விசாரணைக்காக முதல்வர் சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பி வரவழைத்து கேள்விகள் கேட்டு பதில் பெற முடியும். அவசியம் ஏற்படும் பட்சத்தில் கைது செய்து விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

The post நில முறைகேடு புகாரில் சித்தராமையா மீது லோக்ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவு: 3 மாதங்களில் அறிக்கை கேட்கிறது மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: