ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை, மகள்

திருச்சி: தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடந்தது. திருச்சி பொன்மலைப்பட்டி திரு இருதய மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பெல் எழில்நகர் மல்லிகை தெருவை சேர்ந்த எம்எஸ்சி, எம்எட் பட்டதாரியான தனியார் பள்ளி ஆசிரியர் இளங்கோவன்(53), இவரது மகள் பிஇ சிவில் பட்டதாரியான மதுபாலா (30) ஆகிய இருவரும் தேர்வு எழுதினர். இதுகுறித்து இளங்கோவன் கூறுகையில், ‘ஆசிரியர் தேர்வு, குரூப் 2 டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளையும் விடாமல் எழுதி ஒற்றை இலக்கு மதிப்பெண்களில் தோல்வி அடைகிறேன். இருப்பினும் விடாமுயற்சியுடன் இந்த தேர்வை எழுதியுள்ளேன். கால் காசுனாலும் கவர்மென்ட் காசு வாங்கணும் என்ற நோக்கத்தில் வெற்றி இலக்கை அடையும் வரை போட்டி தேர்வுகளை எழுதுவேன். எனது மகளுடன் வந்து தேர்வு எழுதியது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார். மதுபாலா கூறுகையில், ‘திருமணமாகி 8 மாதங்களாகிறது. சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளேன். தந்தையும், நானும் தொடர்ந்து போட்டி தேர்வுகளை எழுதி வருகிறோம். இந்த அனுபவம் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது’ என்றார்.

* தாமதமாக வந்த மாணவியை கையெடுத்து கும்பிட்டு திருப்பி அனுப்பிய எஸ்ஐ
கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே தூய மைக்கேல் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு காலை 9.30 தேர்வுக்கு 9 மணிக்குள் வரவேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதில் 2 நிமிடம் தாமதமாக மாணவி ஒருவர் வந்தார். அவரை கேட் முன்பு நின்றிருந்த எஸ்ஐ தாமதமாக வந்ததால் உள்ளே அனுப்ப முடியாது என கூறினார். மாணவியும், அவரது தந்தையும், எஸ்ஐ-யிடம் உள்ளே அனுமதிக்குமாறு கெஞ்சினர். அதற்கு எஸ்ஐ மாணவியை பார்த்து, ‘‘என் வேலை போகனும்னா, உள்ளே போங்க’’ என கையெடுத்து கும்பிட்டார். இதனையடுத்து அந்த மாணவி தேர்வு எழுத முடியாத சோகத்தில் அங்கிருந்து திரும்பி சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஒரே மையத்தில் குரூப் 2 தேர்வு எழுதிய தந்தை, மகள் appeared first on Dinakaran.

Related Stories: