ஐக்கிய நாடுகள் சபை: ஐநா வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்கள் பட்டியலின்படி, இம்மாத இறுதியில் நியூயார்க்கில் நடக்கும் ஐநா பொதுச் சபை அமர்வின் ஆண்டு விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்ற மாட்டார். ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் பொது விவாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் வரும் 24ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த அமர்வில், ஐநா பொதுச் செயலாளர் அந்தோணியோ கட்டரஸ் ஆண்டறிக்கையை தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து, 79வது அமர்வில் தலைவர் என்கிற முறையில் பிரேசில், உயர்மட்ட விவாதத்தை தொடங்கி வைக்கும். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பைடன் உரையாற்றுவார். இது, அதிபராக பைடனின் கடைசி ஐநா பொது சபை உரையாக இருக்கும்.
இதில் பிரதமர் மோடி வரும் 26ம் தேதி உரையாற்றுவார் என கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட பேச்சாளர் பட்டியலை ஐநா நேற்று வெளியிட்டது. அதில், பிரதமர் மோடியின் பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 28ம் தேதி உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக நியூயார்க்கில் இந்திய வம்சாளியினர் ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட கூட்டத்தில் வரும் 22ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுவார் அதே போல, 22, 23ம் தேதிகளில் ஐநாவின் எதிர்கால மாநாட்டிலும் அவர் பேசுவார் என கூறப்படுகிறது.
The post ஐநா பொதுச் சபையில் மோடி உரை கிடையாது: உத்தேச பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.