ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது பஞ்சாப்பில் விவசாயிகள் ‘பந்த்’: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சண்டிகர்: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் பஞ்சாப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கக் கோரி, பஞ்சாப், அரியானா மாநில எல்லைகளான ஷம்பு மற்றும் கனவ்ரி பகுதிகளில் விவசாயிகள் முகாமிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு, விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கடந்த 35 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராகவும், உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பஞ்சாப்பில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி முழு அடைப்பு போராட்டம் நேற்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. இந்த பந்த் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் ரயில், சாலை போக்குவரத்து முடங்கியது. பல வணிக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன.

பாட்டியாலா, ஜலந்தர், அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பதிண்டா மற்றும் பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வாகன போக்குவரத்து அடியோடு முடங்கியது. பல இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஞ்சாப்பிற்குள் எந்த ரயிலும் நுழைய முடியவில்லை.

அமிர்தரசில் விவசாய தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறுகையில், ‘‘பஞ்சாபியர்கள் இன்று தங்கள் ஒற்றுமையைக் காட்டியுள்ளனர். அவர்கள் பந்த் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கி உள்ளனர். தொழிற்சங்கங்களும், வர்த்தக அமைப்புகளும், மத அமைப்புகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளன’’ என்றார். இந்த பந்த் போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

The post ரயில், பஸ் போக்குவரத்து முடங்கியது பஞ்சாப்பில் விவசாயிகள் ‘பந்த்’: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: