இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சி தலைவரும் முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் நேற்று முன்தினம் இரவு பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த போராட்டத்தில் மாணவர்களுடன் பங்கேற்றார். இங்கு அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால், அங்கு குவிக்கப்பட்ட போலீசார், கடும் குளிரில் மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தடியடி நடத்தி மாணவர்களை விரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியதாக பிரசாந்த் கிஷோர், அவரது கட்சி தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் ஆளும் ஐக்கிய ஜனதா-பாஜ கூட்டணியின் பி டீம் போல செயல்படுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் நேற்று குற்றம்சாட்டி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‘‘மாணவர்கள் கர்தானி பாக் பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வந்தனர்.
அவர்களை காந்தி மைதானத்திற்கு அழைத்து வந்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால் போலீசார் வந்ததும் எஸ்கேப் ஆகிவிட்டார். இதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு நிதிஷ்குமாரின் பி டீம் போல் நடந்து கொள்கிறார்’’ என குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரசாந்த் கிஷோர், ‘‘நான் போராட்ட களத்தில் இருந்து வெளியேறிய பிறகுதான் தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமான அத்தனை போலீசார் மீதும் முதல்வர் நிதிஷ்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 48 மணி நேரத்தில் அதை செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது’’ என்றார். இந்த விவகாரம் பீகார் அரசியலின் மையப் பிரச்னையாக மாறியிருக்கிறது.
பிரியங்கா கண்டனம்
காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வினாத்தாள் கசிவு, ஊழலை தடுக்க வேண்டிய பீகார் அரசு, அதற்கு பதிலாக மாணவர்கள் குரலை ஒடுக்கப் பார்க்கிறது. கடும் குளிரில் மாணவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி தடியடி நடத்தியது மனிதாபிமானமற்றது. பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு, இளைஞர்கள் மீதான இரட்டை அட்டூழியங்களின் அடையாளமாக மாறியிருக்கிறது’’ என்றார்.
The post பீகாரில் பெரும் பரபரப்பு; போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தடியடி: பிரசாந்த் கிஷோர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.