செப்.7ல் நடைபெறும் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்: 500க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து வழிபாடு நடத்த திட்டம்


மதுரை: மதுரை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட சிலைகள் தயார்படுத்தும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாடும் பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கோலாகலமாக எல்லோராலும் கொண்டாடப்படும் இவ்விழா செப். 7ம் தேதி வருகிறது. விநாயகர் சதுர்த்தி என்றாலே கட்டாயமாக எல்லோர் வீட்டிலும் பிள்ளையார் சிலை வாங்கக்கூடிய வழக்கம் இருக்கும். சிலர் வர்ணப் பிள்ளையார் சிலைகளை வாங்குவார்கள். ஒரு சிலர் வீட்டில் களிமண் சிலைகளை வைத்து வழிபடுவர். ஒரு சிலர் வீட்டில் சிலைகளை வைக்காமல் புகைப்படத்தை வைத்தே வழிபாடு செய்வார்கள். அது அவரவர் பழக்கம்.

கடையிலிருந்து நீங்கள் விநாயகரை வாங்குவதாக இருந்தால் களிமண் பிள்ளையாரை வாங்கலாம். மண்ணால் செய்யப்பட்ட கண்ணியம்மன் பிள்ளையாருக்கு அதீத சக்தி உண்டு. இது வருடத்தில் ஒரு நாள் எளிய வியாபாரிகளுக்கு உதவுவதாக இருக்கும். பிள்ளையார் கொடை மிகவும் அழகாக விற்கப்படும். மேலும் சிலர் களிமண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து, அவர்களுக்கு தெரிந்த வகையில் விநாயகர் சிலைகளை செய்து வழிபடுவர். இதில் குழந்தைகளும் ஆர்வமுடன் ஈடுபடுவர். பொதுவாக வீடுகளில் இரண்டு பிள்ளையார் சிலைகளை வைத்து எருக்கன் பூ, அருகம்புல் மாலைகள் அணிவித்து அழகுபடுத்தி, முழு திருப்தியோடு சந்தோஷத்தோடு இந்த வழிபாட்டை தொடங்குவார்கள். இதோடு மட்டுமல்லாமல் பூஜை அறையில் இருக்கும் மற்ற சுவாமி படங்களுக்கும் அலங்காரம் செய்து முடித்துவிட்டு, விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், பால், பழம் இப்படி முடிந்த நிவேதனத்தை வைத்து தீப தூப ஆராதனை காண்பித்து வணங்குவார்கள்.

பூஜை முடிந்த பிறகு விநாயகரைக் கொண்டு போய் தண்ணீரில் போட்டுவிட்டு வரவேண்டும். வீட்டின் அருகில் ஆறு, குளம், ஏறி, கிணறு எது இருந்தாலும் ஜாக்கிரதையாக கொண்டு போய் அந்த விநாயகரை நீர் நிலைகளில் சேர்த்து விட்டு வருவது சிறப்பான பலனை கொடுக்கும் என்பது ஐதீகம். இதுகுறித்து ஆன்மீக ஆர்வலர் முருகன் கூறும்போது, ‘‘மதுரை விளாச்சேரி மற்றும் மாட்டுத்தாவணியில் உள்ள சர்வேயர்காலனி சாலை பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக தங்கியிருந்து விநாயகர் சிலைகளை பல வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் செய்து வருகின்றனர். சிறு சிலை முதல் பல அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளை அவர்கள் உருவாக்குகின்றனர். இவற்றை மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் பலரும் வந்து வாங்கிச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

இதற்காக தற்போது, விநாயர்கள் சிலைகளை இரவும், பகலுமாக தயாரித்து வருகின்றனர். தற்போது, வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகிறது. இந்த வருடம் ஒரு சிலையின் விலை ரூ.100 முதல் ரூ.30 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாகிறது. தயார் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும் நாளை (செப். 4)க்கு பிறகு அவற்றுக்கு முன்னதாகவே பணம் கொடுத்து பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்’’ என்றார். ஆன்மிக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதனால், மதுரை நகரில் 200 மற்றும் புறநகரில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த இடங்களை ஆய்வு செய்து, பிரச்னை இல்லாமல் இருக்கும் இடத்தை போலீசார் தேர்வு செய்து, அந்த இடத்தில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்’’ என்றார்.

தடையை நீக்கும் விநாயகர்…
வாழ்க்கையில் பலருக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும்போது அவை முழுமையாக முடிவுக்கு வராமல் ஏதேனும் தடைகள் ஏற்படும். எந்த வேலையை தொட்டாலும் அதில் தோல்வி அடைந்து விடுவதாக அவர்கள் வருத்தப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் அன்றைய தினம் பிள்ளையார் உருண்டை அல்லது பிள்ளையார் கொழுக்கட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை 101 என்ற கணக்கில் தயார் செய்து, வீட்டில் உள்ள பெரியவர்களின் துணையோடு விநாயகருக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தினால் அவர்களுக்கு ஏற்பட்ட தடைகள் விரைவில் நீங்கும் என்பது ஆன்மிக ஈடுபாடு உள்ளோரின் நம்பிக்கையாக இருக்கிறது.

The post செப்.7ல் நடைபெறும் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்: 500க்கும் மேற்பட்ட இடங்களில் வைத்து வழிபாடு நடத்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: