பாஜ, மஜத தலைவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது ஏன்? கர்நாடகா ஆளுநரை கண்டித்து காங். பேரணி: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தர்ணா

பெங்களூரு: கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை கண்டித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் காங்கிரசார் பிரமாண்ட பேரணி நடத்தினர். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மூடா நிர்வாகம் சார்பில் 14 வீட்டுமனை ஒதுக்கப்பட்டது. இதை கண்டித்து விதிகள் மீறி முதல்வர் சித்தராமையா மூடாவிடம் இருந்து வீட்டுமனை பெற்றுள்ளார் என பாஜ, மஜத தலைவர்கள் குற்றம் சுமத்தினர். முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் எனவும் பாஜ மஜதவினர் பாதயாத்திரை நடத்தினர்.

இந்நிலையில் தனிநபர்கள் சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மீது வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார். இதை கண்டித்து பெங்களூரு விதான சவுதா வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவரும், துணைமுதல்வருமான டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் தர்ணா நடத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்களுடன் பேரணியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் தாவர்சந்த்கெலாட்டை சந்தித்து டி.கே.சிவகுமார் மனு அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் டி.கே. சிவகுமார் கூறியதாவது, ‘கர்நாடக அரசு நிலையாக இருந்தாலும் அதை நிலை குலைய செய்யும் வகையில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.அதே நேரம் ஒன்றிய அமைச்சர் குமாரசாமிக்கு எதிரான கனிம நிறுவனத்திற்கு அனுமதி அளித்த வழக்கு மீது அவர் பரிசீலனை செய்யவில்லை. பாஜ கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சசிகலா ஜொள்ளே, முருகேஷ் நிரானி, ஜனார்த்தன்ரெட்டி ஆகியோர் வழக்கில் அனுமதி கோரப்பட்டாலும் ஆளுநர் இதுவரை பரிசீலனை செய்யாமல் மவுனமாக இருக்கிறார். இதன் மூலம், ஆளுநர் அலுவலகம் பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது’ என்றார்.

The post பாஜ, மஜத தலைவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்காதது ஏன்? கர்நாடகா ஆளுநரை கண்டித்து காங். பேரணி: முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: