சூப்பர் கோப்பை கால்பந்து: ரியல் மாட்ரிட் 6வது முறையாக சாம்பியன்

வார்சா: சூப்பர் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றிப் பெற்று 6வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பியாவில் உள்ள பிரபல கால்பந்து கிளப்களுக்கு இடையில் யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக், யுஇஎப்ஏ ஐரோப்பா லீக் கால்பந்து போட்டிகள் நடைபெறும். இவற்றில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளுக்கு இடையே ‘சூப்பர் கோப்பை’ இறுதி ஆட்டம் நடக்கும்.

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்) அணியும், ஐரோப்பா லீக் பட்டத்தை அட்லாண்டா(இத்தாலி) அணியும் வென்றன. அதனால் இந்த 2 அணிகளும் சூப்பர் கோப்பை பைனலில் விளையாட தகுதிப் பெற்றன. அதன்படி போலந்து தலைநகர் வார்சாவில் உள்ள தேசிய விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த சூப்பர் கோப்பை பைனல் இவ்விரு அணிகளும் அணிகள் மோதின.

ஏற்கனவே 8 முறை சூப்பர் கோப்பை பைனலில் விளையாடி உள்ள ரியல் மாட்ரிட், அவற்றில் 5 முறை கோப்பையை வென்றுள்ளது. அதே நேரத்தில் அட்லாண்டா அணி முதல் முறையாக சூப்பர் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடியது.

அனுபவத்துக்கு ஏற்ப கூடுதல் வேகம் காட்டிய மாட்ரிட் அணிக்கு அட்லாண்டா அணி ஆரம்பத்தில் பெரும் சவாலாக இருந்தது. அதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என கோலின்றி சமனில் முடிந்தது. அதனையடுத்து 2வது பாதியில் மாட்ரிட் கூடுதல் வேகம் காட்டியது. அதை சமாளிக்க அட்லாண்டா திணறிய நேரத்தில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து மாட்ரிட் முன்னிலைப் பெற்றது. அந்த அணியின் ஃபெடொரிக்கோ வால்வெர்டே 59வது நிமிடத்தில் கோல் போட்டார். மாட்ரிட் அணிக்காக தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய நட்சத்திர வீரர் கிளியன் எம்பாப்வே 68வது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினார்.

அதே நேரத்தில் அடுத்த 22 நிமிடங்களில் இரு அணிகளும் மேற்கொண்ட கோல் முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தியது. அதனால் 6வது முறையாக சூப்பர் கோப்பையை மாட்ரிட் அணி வீரர்கள் முத்தமிட்டனர். அந்த அணி ஏற்கனவே 2002, 2014, 2016, 2017, 2022ம் ஆண்டுகளில் ேகாப்பையை தட்டிச் சென்றது.

The post சூப்பர் கோப்பை கால்பந்து: ரியல் மாட்ரிட் 6வது முறையாக சாம்பியன் appeared first on Dinakaran.

Related Stories: