சரித்திரம் படைக்கும் விதமாக உங்கள் செயலை தொடங்க வேண்டும் 5 ஆண்டுகளில் நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்றுவது அதிகாரிகளின் பொறுப்பு

*கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு

திருமலை : சரித்திரம் படைக்கும் விதமாக உங்கள் செயலை தொடங்க வேண்டும். 5 ஆண்டுகளில் தாங்கல் நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்றுவது அதிகாரிகளின் பொறுப்பு என்று கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.ஆந்திர மாநிலத்தில் அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது துணை முதல்வர் பவன்கல்யாண், மாநில அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள், எஸ்பிகளுடன் அந்தந்த மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மக்கள் ஆட்சி அதிகாரம் கொடுப்பது மக்களுக்கு சேவை செய்வதற்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும். ஆனால் கடந்த ஆட்சியில் ஜெகன்மோகன் பதவியேற்ற பிறகு, கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்களுடன் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டம் நடந்த மறுநாளே மக்களிடம் குறைகள் கேட்பதற்காக அமைக்கப்பட்ட பிரஜா வேதிகா கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மாநிலத்தை அனைத்து துறைகளிலும் 5 ஆண்டுகளில் சீரழிவு செய்து 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி கொண்டு சென்றுள்ளனர். அதிகாரிகளை மிரட்டி ஊழல், முறைகேடுகள் செய்துள்ளனர். ஒரு காலத்தில் ஆந்திராவில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என்றால் மத்தியில் பல துறையில் முக்கிய பொறுப்புகளுக்கு அழைத்து பதவி வகித்தனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஆந்திர அதிகாரிகள் என்றாலே ஏளனமாக பார்க்கக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டனர்.

அதுபோன்ற நிலை இனி இருக்கக்கூடாது. நான் 2020 தொலைதூரப் பார்வை என்று கூறினேன். அப்பொழுது என்னை அனைவரும் ஒரு விதமாக கூறினார்கள். ஆனால் இப்பொழுது அதன் நோக்கம் தான் ஐதராபாத் நகரம் உள்ளது. அதேபோன்று தற்பொழுது விஷன் 2047 எனும் தொலைநோக்கு பார்வையுடன் நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.உலகில் அதிக சம்பளம் வாங்க கூடியவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.

அதில் தெலுங்கு மக்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 5ம் இடத்தில் உள்ள நிலையில் 2047ம் ஆண்டில் முதலாம் இடத்தில் வரவேண்டும். அதற்கு ஏற்ப அனைவரும் பணிபுரிய வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்றாம் இடத்திற்கு முயற்சி வருவோம். அதற்கு ஏற்ப நாமும் பணிபுரிய வேண்டும். வரும் நாட்களில் மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது பணிகள் இருக்கும். நான் பணி செய்வதுடன் உங்களையும் பணி செய்ய வைப்பேன்.

வருங்காலம் சரித்திரம் படைக்கும் விதமாக உங்கள் செயல் இப்போதில் இருந்தே தொடங்க வேண்டும். ஏழைகளின் சேவை என்னும் புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். செப்டம்பர் 20ஆம் தேதி வந்தால் அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிறது. தேர்தலின் பொழுது கொடுத்த வாக்குறுதிகளான சூப்பர் சிக்ஸ் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றுவதற்கு கட்டுப்பட்டு இருக்கிறேன் அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் தாங்கள் நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்றுவது அதிகாரிகளின் பொறுப்பு. எளிமையான அரசும், பயனுள்ள நிர்வாகமும்தான் என் கொள்கை. நான் செல்லும் இடங்களில் மக்கள் தெரியாமல் இருக்க திரைகள் தொங்கவிடுவதும், மரங்களை வெட்டுவதும் கூடாது. 1995ல் இருந்த சந்திரபாபுவை பார்ப்பீர்கள். இன்னும் அந்த வேகத்தை நீங்கள் எட்டவில்லை. விரைவில் திடீர் சோதனைக்கு வருவேன். அன்று அமைச்சர்களும் அதிகாரிகளும் ஓடினர். நாங்கள் வேலை செய்வோம், உங்களையும் வேலை செய்ய வைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை பாயும்

கடந்த ஆட்சியில் இயற்கை வளங்களான மக்களின் உரிமையாக கருதப்படும் வீடு கட்டுவதற்கு பயன்படும் மணலில் முறைகேடு நடைபெற்றது. இந்த முறைகேடுகள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுகிறேன். இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்படும். இது போன்று அனைத்து துறைகளிலும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மணல் விநியோகத்தில் முறைகேடுகள் இல்லாமல் கணினி மயமாக்கப்பட்டு பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் சுலபமாக அவர்கள் பெரும் விதமாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதில் எந்த தவறு இருந்தாலும் நீங்களே தவறு செய்தாலும் உங்களை திரும்ப பெற கூட தயங்க மாட்டேன் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

The post சரித்திரம் படைக்கும் விதமாக உங்கள் செயலை தொடங்க வேண்டும் 5 ஆண்டுகளில் நிர்ணயித்த இலக்குகளை நிறைவேற்றுவது அதிகாரிகளின் பொறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: