மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு: கிரீஷ்மா தரப்பு முடிவு


திருவனந்தபுரம்: காதலன் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் நெய்யாற்றின்கரை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கிரீஷ்மா தீர்மானித்துள்ளார். குமரி கல்லூரி மாணவரான கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று முன்தினம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கிரீஷ்மா கேரள உயர்நீதிமன்றத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கிரீஷ்மா தரப்பில் கூறப்படுவதாவது: நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தீர்மானித்துள்ளோம். இது அபூர்வங்களில் அபூர்வமான வழக்கு அல்ல. வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படவில்லை. கிரீஷ்மாவின் வயதை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று மேல்முறையீட்டு மனுவில் வேண்டுகோள் விடுக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

திருவனந்தபுரம் சிறையில் 1ம் நம்பர்
கிரீஷ்மாவை போலீசார் திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறையில் உள்ள 14வது பிளாக்கில் அடைத்தனர். இந்த ஆண்டின் முதல் கைதி என்பதால் கிரீஷ்மாவுக்கு 1/2025 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. கிரீஷ்மாவுடன் சேர்த்து கேரளாவில் தூக்கு கயிறுக்காக காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் ரஞ்சித் சீனிவாசன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 34 வருடங்களுக்கு முன்பு கடந்த 1991ல் தான் கேரளாவில் 14 பேரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த ரிப்பர் சந்திரன் என்பவருக்கு கடைசியாக கண்ணூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு இதுவரை யாருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவில்லை.தூக்கு தண்டனை பட்டியலில் கிரீஷ்மாவுடன் சேர்த்து 2 பெண்கள் உள்ளனர்.

8 மாதங்களில் 4 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி
கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்த நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பஷீர் திருச்சூர் மாவட்டம் வடக்காஞ்சேரியை சேர்ந்தவர் ஆவார். கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்த நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார்.  கடந்த 8 மாதங்களுக்கு முன் கொலை வழக்கு ஒன்றில் பெண் உட்பட 3 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். தற்போது கிரீஷ்மாவுக்கும் மரண தண்டனை விதித்துள்ளார்.

நீதிபதி கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்
கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்த நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பஷீரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய கேரள ஆண்கள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இன்று காலை திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் ஆண்கள் சங்க உறுப்பினர்கள் சேர்ந்து நீதிபதி பஷீரின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய உள்ளனர்.

The post மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு: கிரீஷ்மா தரப்பு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: