அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்: பெலகாவி காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி முழக்கம்


பெங்களூரு: மகாத்மா காந்தி தலைமையில் கடந்த 1924ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி நடந்த மாநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 27ம் தேதி பெலகாவியில் நடத்துவது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட அந்த மாநாடு, நேற்று பெலகாவியில் நடந்தது. பெலகாவியில் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியலமைப்பு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எம்.பி பிரியங்கா காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

பெலகாவி சிபிஇடி மைதானத்தில் நடந்த மாநாட்டில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ‘‘ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோரை வைத்தே பாஜ விளையாடிவருகிறது. அம்பேத்கரை அவமதிக்க பாஜ முயல்கிறது. பாஜவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மசூதிகளுக்குக் கீழே உள்ள கோயில்களைக் கண்டுபிடித்துவருகின்றனர். ஏன் இப்படி செய்கிறார்கள்? இது நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தானது. அவர்கள் மனம் வருந்துவார்கள் என்று பேசினார். பிரியங்கா காந்தி பேசுகையில், நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரைக் கொடுத்த வரலாறு நமக்கு உண்டு.

ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர்கள் நாம் அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற உயிரை விடவும் நாம் தயாராக இருக்கிறோம். தீய அரசுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். எங்களுடன் இணைந்து போராட மக்களாகிய நீங்களும் உறுதியாக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்தார். இப்படியொரு அரசையும், அமைச்சரையும் இதற்கு முன் நாம் பார்த்ததில்லை. அரசியலமைப்பையும் அம்பேத்கரையும் அவமதிப்பதை பொறுத்துக்கொள்ளாதீர்கள். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க உயிரையும் தியாகம் செய்ய தீர்மானிக்க வேண்டும் என்றார்.

The post அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காக்க உயிரையும் தியாகம் செய்ய தயார்: பெலகாவி காங்கிரஸ் மாநாட்டில் பிரியங்கா காந்தி முழக்கம் appeared first on Dinakaran.

Related Stories: