புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில்,‘‘மோடியின் வளர்ந்த இந்தியாவின் உண்மை நிலை: உங்கள் கடின உழைப்பு யாருக்கு லாபம்? நாட்டின் பொருளாதாரத்தின் சக்கரம் உங்கள் வியர்வை மற்றும் ரத்தத்தால் சுழல்கிறது. ஆனால் அதில் உங்களுக்கு நியாயமான பங்கு கிடைக்கிறதா? சற்று யோசித்து பாருங்கள். பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 60 ஆண்டுகளில் மிக குறைந்த நிலைக்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக மக்கள் வேலைவாய்ப்புக்காக போராடி வருகின்றனர். விவசாயத்துறையில் உள்ள தவறான கொள்கைகள் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் நிலைமையை மோசமாக்கியுள்ளன. அவர்களால் வாழ்க்கையை நடத்தவே முடியவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழிலாளர்களின் உண்மையான வருமானம் தேக்க நிலையில் உள்ளது அல்லது குறைந்துள்ளது.
தீங்கு விளைவிக்கும் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. அதே நேரத்தில் பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.அதிகரித்து வரும் பணவீக்கத்தால் ஏழைகள் மட்டுமின்றி சம்பளம் வாங்கும் வர்க்கத்தினரும் தங்கள் தேவைகளுக்காக கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். உண்மையான வளர்ச்சி என்பது அனைவரும் முன்னேறும்போது தான் கிடைக்கும் . வணிகத்திற்கான நியாயமான சூழல், நியாயமான வரி முறை மற்றும் தொழிலாளர்களின் வருமானம் அதிகரித்தல். இது மட்டுமே நாட்டை வளமாகவும் வலுவாகவும் மாற்றும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளை பறிக்கும் ஆயுதம்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், ‘‘பீகாரில் தேர்வு வினாத்தாள் மோசடி காரணமாக பாதிக்கப்பட்டதோடு, போலீசாரின் தடியடிக்கு ஆளான மாணவர்களை சந்தித்து பேசினேன். வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு மோசடியின் சிக்கலான நிலை குறித்து மாணவர்கள் புகார் கூறினார்கள். தேர்வு எழுதுவோருக்கு வினாத்தாள் கிடைக்கிறதோ இல்லையோ சமூக ஊடகங்களில் வினாத்தாள் வைரலாகிறது. தேர்வு வினாத்தாள் கசிவு என்பது இளைஞர்களின் உரிமைகளை பறிக்கும் ஆயுதமாகும்” என்றார்.
The post அனைவரும் முன்னேறினால் தான் உண்மையான வளர்ச்சி: ராகுல் காந்தி கருத்து appeared first on Dinakaran.