பல்கலை.களில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம்: கேரள சட்ட சபையில் யுஜிசிக்கு எதிராக தீர்மானம்


திருவனந்தபுரம்: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களாக கல்வித்துறையில் சிறந்து விளங்கும் பேராசிரியர்களை மட்டுமே நியமிப்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இதனை மாற்றி கல்வித்துறை சாராத தொழில்துறை நிபுணர்கள், பொதுத் துறைகளை சேர்ந்தவர்கள் என்று கல்வித்துறைக்கு வெளியே இருந்து துணைவேந்தர்களை நியமிக்க ஒன்றிய அரசு தீர்மானித்துள்ளது. மேலும் துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தை குறைத்து ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டி நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யுஜிசியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டசபையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல் சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்திய கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தை பின்பற்றி கேரள சட்டசபையிலும் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் விதி 118ன் கீழ் இந்த தீர்மானத்தை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்ட வரைவு வழிகாட்டுதல்கள் குறித்த மாநில அரசுகள் மற்றும் கல்வியாளர்களின் கவலைகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் சபையில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பல்கலைக்கழகங்களின் தரத்தை பராமரிப்பதிலும், மேம்படுத்துவதிலும் மாநில அரசுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதையெல்லாம் புறக்கணித்து விட்டு துணைவேந்தர் நியமனம், ஆசிரியர்களின் தகுதி, பணி நிலைகள் தொடர்பான விதிகள் போன்றவற்றில் மாநில அரசுகளை முற்றிலுமாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் யுஜிசியின் அணுகுமுறை ஏற்கத்தக்கதல்ல.கல்வியாளர்களை தவிர்த்து தனியார் துறைகளை சேர்ந்த நபர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் அணுகுமுறை உயர்கல்வியை வணிகமயமாக்கும் நடவடிக்கையாகும். இது முற்றிலும் கண்டனத்திற்குரியதாகும். இவ்வாறு அவர் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். பின்னர் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

The post பல்கலை.களில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம்: கேரள சட்ட சபையில் யுஜிசிக்கு எதிராக தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: