சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காதது ஏன்?திமுக எம்பி சரமாரி கேள்வி

புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காதது ஏன் என்று திமுக எம்பி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவை திமுக எம்பி கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நேற்று,’சென்னை மெட்ரோ ரயில் 2ம்கட்ட திட்டம் தொடர்பாக நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசிடம் இருந்து அரசு ஏதேனும் கோரிக்கையை பெற்றுள்ளதா?. அந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா?.

சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது என்பது உண்மையா? இது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டச் செலவுகள் முழுமையாக தமிழ்நாடு அரசின் செலவில் தான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டோகன் சாஹு அளித்த பதில்:

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு 118.9 கிமீ நீள பாதையை முன்மொழிந்துள்ளது. மொத்தம் ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டம் அதிக செலவு மிகுந்த ஒன்று என்பதால் ஒன்றிய அரசின் பல்வேறு செலவீனதுறைகளின் ஒப்புதலுக்காகவும், ஆய்வுக்காகவும் உள்ளது. தற்போது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான முழு செலவையும் தமிழ்நாடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்பி, தேசிய தேர்வு முகமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் அளித்த பதில்: 2018ம் ஆண்டு முதல் தேசிய தேர்வு முகமை 240 தேர்வு நடத்தி உள்ளது. 5.4 கோடி மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். கொரோனா உள்பட பல்வேறு காரணங்களுக்காக 16 தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன’ என்றார்.

The post சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் அளிக்காதது ஏன்?திமுக எம்பி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: