முதல்வர் யோகியை எதிர்க்கும் பா.ஜ எம்எல்ஏக்களுக்கு அகிலேஷ் அழைப்பு: 100 பேர் வந்தால் ஆட்சி அமைக்கலாம் உபி அரசியலில் பெருங் குழப்பம்

லக்னோ: உத்தரபிரதேச அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக 100 பா.ஜ எம்எல்ஏக்கள் வந்தால் ஆட்சி அமைக்கலாம் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். 18வது மக்களவை தேர்தலில் பா.ஜவுக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜவுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இதனால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ஆந்திரா முதல்வர் சந்திரபாபுநாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய நிர்பந்தம் பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம் இந்த மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ வீழ்ச்சி அடைந்ததுதான் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கருதுகிறார்கள். உபியின் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜ கட்சி வெறும் 33 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால் 2014 தேர்தலில் பா.ஜ 71 இடங்களையும், 2019ல் 62 இடங்களையும் வென்றதால் மத்தியில் மோடியால் தனித்து ஆட்சி அமைக்க முடிந்தது.

இந்த முறை வெறும் 33 தொகுதியில் பா.ஜ சுருங்கி விட்டது. உபி முதல்வர் யோகி,’ பா.ஜ தொண்டர்களின் அதீத நம்பிக்கையால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டது’ என்று விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா திடீரென டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, கட்சி தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார்.

இதை தொடர்ந்து கட்சியின் மாநில தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த பரபரப்பான சூழலில் உபி அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் யோகி கூட்டினார். இதில் துணைமுதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்து கொள்ளவில்லை. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் துணை முதல்வர் கேசவ்பிரசாத் மவுரியாவின் டிவிட்டர் பதிவு உபி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘ஆட்சியை விட கட்சி தான் பெரியது.

லக்னோவில் உள்ள எண்.7, காளிதாஸ் சாலையில் உள்ள எனது இல்லத்தின் கதவுகள் அனைவருக்கும் திறந்தே இருக்கும். நான் முதலில் பாஜ தொண்டன், அதன் பின்னர் துணை முதல்வர் பதவி எல்லாம். அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள்,மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கட்சி தொண்டர்களை மதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட டெல்லி தலைவர்களை கேசவ்பிரசாத் மவுரியா சந்தித்துவிட்டு வந்தபிறகு வெளியிட்ட இந்த டிவிட்டர் பதிவு மூலம் முதல்வர் யோகியின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சூழலில் உபி கவர்னர் ஆனந்திபென் பட்டேலை நேற்றுமுன்தினம் இரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீரென சந்தித்து பேசினார். அப்போது உபி சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ள விவகாரம் தற்போது உபி அரசியலில் புயலை எழுப்பி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டப்பேரவையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர்.

2022ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 255 இடங்களில் வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாம் முறையாக முதல்வரானார். சமாஜ்வாடி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது பா.ஜவில் உள்ள 255 எம்எல்ஏக்களில் பலர் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் யோகி ஆட்சி நடத்தும் முறையை அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில், பாஜ எம்எல்ஏக்களுக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பதிவில்,‘மழைக்காலகூட்டத்தொடர் சலுகை: 100 எம்எல்ஏக்களை கூட்டி வாருங்கள். ஆட்சி அமைக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி சமாஜ்வாடி மூத்த தலைவர்கள் கூறுகையில்,’ முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தியில் உள்ள பாஜ எம்எல்ஏக்களுக்கு இது ஒரு செய்தி. 2022 உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி 111 இடங்களை வென்றது. ஆட்சி அமைக்க 202 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் மேலும் 100 அதிருப்தி பாஜ எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால், நாங்கள் எளிதாக ஆட்சி அமைப்போம்’ என்று தெரிவித்தனர். இது உ.பி அரசியலில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post முதல்வர் யோகியை எதிர்க்கும் பா.ஜ எம்எல்ஏக்களுக்கு அகிலேஷ் அழைப்பு: 100 பேர் வந்தால் ஆட்சி அமைக்கலாம் உபி அரசியலில் பெருங் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: