ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிச்சம். பழைய வருமான வரி முறையைத் தேர்வு செய்பவர்களுக்கு ஆண்டு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாகவும், புதிய வருமான வரி முறையை தேர்தெடுப்பவர்களுக்கு வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.3 லட்சமாக உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தான் இது உயர்த்தப்பட்டது. வரி தள்ளுபடி சலுகையுடன் கணக்கிட்டால் ரூ.7.5 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை. ஆனால், புதிய வரி முறையை தேர்வு செய்பவர்கள் வீட்டுக் கடன் வட்டி, ஆயுள், மருத்துவ காப்பீடுகளில் முதலீடு செய்ததற்கு வரிச்சலுகை பெற முடியாது.
தோற்றத்தில் வரிச்சலுகை அதிகமாக இருப்பது போல் தோன்றினாலும், பெரும்பான்மையானவர்களுக்கு இதனால் பலன் இல்லை. இதனால், இந்த நிதியாண்டு பட்ஜெட்டிலாவது வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாஜ அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தி அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிவரும் நிலையில், நடப்பாண்டு நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் மேலும் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: கடந்த இடைக்கால பட்ஜெட்டை விட, கூடுதலாக ரூ.30,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை அரசுக்கு வருமான வரி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஜிடிபி அதிகரிப்பதற்கு ஏற்ப, வரி வசூலும் அதிகரிக்கலாம். எனவே, வரும் பட்ஜெட்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரியில் தலா ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரை வரி வசூல் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைக்கால பட்ஜெட்டில், நடப்பு நிதியாண்டில் மொத்த வரி வசூல் ரூ.38.3 லட்சம் கோடியாக இருக்கம் என மதிப்பீடு செய்யப்பட்டது. இது முந்தைய நிதியாண்டை 10.7 சதவீதம் அதிகம். இதில், நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.21.99 லட்சம் கோடி; மறைமுக வரி வசூல் ரூ.16.31 லட்சம் கோடி. நடப்பு நிதியாண்டில் இதுவரை நேரடி வரி வசூல் 19.54 சதவீதம் அதிகரித்து ரூ.5.74 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 11ம் தேதி வரை ரீபண்டுக்கு முந்தைய மொத்த வரி வசூல் ரூ.6.45 லட்சம் கோடி. இதில் தனிநபர் வரி வருவாய் ரூ.3.61 லட்சம் கோடி; கார்ப்பொரேட் வரி ரூ.2.65 லட்சம்கோடி.
மறைமுக வரியை பொறுத்தவரை இடைக்கால பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி ரூ.10.67 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது இது முந்தைய நிதியாண்டில் ரூ.9.57 லட்சம் கோடி. ஜிஎஸ்டி மூலம் வரி வசூல் நடப்பு நிதியாண்டில் 10 முதல் 11 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும், நடப்பு ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ஜிடிபியில் 5.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதனை அடுத்த நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். பாஜ அரசுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி வரம்பு உயர்த்தி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post நடப்பு ஆண்டில் தாக்கல் செய்ய உள்ள ஒன்றிய பட்ஜெட்டில் வரி வசூல் இலக்கு மேலும் ரூ.40,000 கோடி அதிகரிக்கும்: அதிகாரிகள் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.