திருப்போரூர்: சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையையும், பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூரில் இருந்து நெம்மேலி வரை 4 கிமீ தூர இணைப்பு சாலை உள்ளது. 12 அடி அகலம் கொண்ட இச்சாலையை அகலப்படுத்தவேண்டும் என கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி, சூேளரிக்காடு, பேரூர், பட்டிபுலம், கிருஷ்ணன்காரணை, புதியகல்பாக்கம், புதிய நெம்மேலி, சாலவான்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், சாலையை அகலப்படுத்த வேண்டியது முக்கியம் என கருத்துரு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் கந்தசாமி கோயில் சந்திப்பில் இருந்து புறவழிச்சாலை வரை 12 அடி அகல சாலையை 18 அடி அகல சாலையாக 700 மீட்டர் தூரத்திற்கு அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சாலை நடுவே சேதமடைந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு, செக்கடி தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து செல்லும் கால்வாயோடு இணைத்து புதிய சிறுபாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதையடுத்து பழைய சிறுபாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் புறவழி சாலையில் இருந்து கோயில் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயிலுக்கு வரும் வாகனங்களும், செங்கல்பட்டு செல்லும் வாகனங்களும் புறவழிச்சாலை வழியாக ஆலத்தூர், தண்டலம் சென்று சுற்றிவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
