22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6 கோடி இழப்பீடு முதன்மை நீதிபதி ஆணை வழங்கினார் வேலூர் கோர்ட்டில்

வேலூர், டிச.13: வேலூர் கோர்ட்டில் 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6 கோடி இழப்பீடு ஆணையை வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி நேற்று வழங்கினார். தமிழக சட்டப் பணிகள் ஆணை குழு சார்பில் வேலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மோட்டார் விபத்து இழப்பீடு வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணும் முன் அமர்வு நிகழ்ச்சி வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் அருகே உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு அதற்கான உத்தரவு ஆணையை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன்படி வேலூர் அடுத்த பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (32). தனியார் நிறுவனத்தில் மின் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.67 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து அந்த குடும்பத்தினருக்கு உத்தரவு ஆணையை முதன்மை நீதிபதி இளவரசன், காப்பீடு நிறுவனத்தின் நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார். அப்போது, மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் பேசுகையில், மக்கள் நீதிமன்றம் மக்களுக்காக பல்வேறு வழக்குகளை சமரசமாக தீர்த்து வைக்க உதவுகிறது. இதை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். தொடர்ந்து காப்பீடு நிறுவனம் சார்பில் 22 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 6 லட்சத்து 42 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப்பணிகள் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: