(வேலூர்) பசுவை கடித்து குதறிய மர்ம விலங்கு சிறுத்தையா? வனத்துறை விசாரணை ஒடுகத்தூர் அருகே கொட்டகையில் புகுந்து

ஒடுகத்தூர், டிச.13: ஒடுகத்தூர் அருகே கொட்டகையில் அடைத்து வைத்திருந்த பசுவை மர்ம விலங்கு கடித்து குதறியது. சிறுத்தை தாக்கியதா? என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒடுகத்தூர் அடுத்த அகரம் ஊராட்சிக்கு உட்பட்ட போடிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாளைய்யன்(70). சொந்தமாக 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் பசுக்களை மேய்ச்சலுக்கு நிலத்தில் விட்டுவிட்டு மீண்டும் மாலையில் வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று அதிகாலை திடீரென பசுக்களின் அலறல் சத்தம் கேட்டது. உடனே பாளைய்யன் கொட்டகைக்கு சென்று பார்த்தபோது ஒரு பசுவானது பின் பகுதியில் பலத்த ரத்த காயத்துடன் துடித்து கொண்டு இருந்தது. மேலும், மர்ம விலங்கு கடித்து குதறியது போல் நகக்கீறல்கள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாளைய்யன் உடனே அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் நேரில் வந்து படுகாயமடைந்த பசுவிற்கு சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர் வெங்கடாசலம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போடிப்பேட்டை கிராமம் வனப்பகுதியை ஒட்டியவாறு உள்ளதால் வனப்பகுதியில் இருந்து மர்ம விலங்கு வந்து பசுவை தாக்கி இருக்கலாம் அல்லது நாய்கள் கடித்து இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் சிறுத்தையும் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: