அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார்

வேலூர், டிச.9: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.24 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில், நேற்று கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர், எங்களது உறவினர் ஒருவர் ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் எனக்கு வேலை வாங்கித் தருவாகக் கூறியுள்ளார். உங்களுக்கும் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறினார். இதை நம்பி, கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.82 ஆயிரம் கொடுத்தேன். பின்னர் பல தவணைகளில் மொத்தம் ரூ.4.24 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால், பணத்தை வாங்கிய அவர் வேலை வாங்கித் தரவில்லை. மேலும் அவர் தலைமறைவாகி விட்டார். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியவர் மீது விசாரணை நடத்தி, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Related Stories: