வேலூர், டிச.8: கார்த்திகை, மார்கழி மாதங்களில், பனிப்பொழிவால் பெண்களுக்கு முகவாதம் ஏற்படுவதை தடுப்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இதுகுறித்து வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவர்கள் கூறியதாவது: கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம்.
ஆனால் முகவாதம் என்பது நாம் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதன் அறிகுறிகளை நாம் எளிதாக கண்டறியலாம்.அதாவது பேசும்போதோ, அல்லது சிரிக்கும்போதோ ஒரு பக்கமாக வாய் கோணும். பாதிக்கப்பட்டவர்கள் கண்களை முழுமையாக மூட முடியாது. வலது அல்லது இடது கண்ணில், கண்ணீர் வரும். பாதிக்கப்பட்ட புருவத்தை உயர்த்த முடியாது. நாக்கில் சுவை தெரியாது. இதற்கு காரணம் அதிக பனி காற்று, காது வழியாக புகுவதால் முக அசைவுகளுக்கு உதவும் நரம்பில் நீர் கோர்த்து நரம்பு செல்லும் சிறிய துவாரத்தை அழுத்துகிறது. இதனால் முக தசைகள் செயலிழந்து முகவாதம் ஏற்படுகிறது.
