டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள்

மும்பை: டி20 உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணிக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி விருந்தளித்து வாழ்த்து தெரிவிக்க, மும்பையில் மெரைன் டிரைவ் முதல் வான்கடே ஸ்டேடியம் வரை பிரமாண்ட வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் கடலென திரண்ட ரசிகர்களுக்கு மத்தியில் உலகக் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள் வெற்றிப் பெருமிதத்துடன் திறந்த பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். சாதித்த வீரர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.125 கோடி ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. இதில், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகளை துவம்சம் செய்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பரபரப்பான இறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வென்று 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. கடந்த 2011ல் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி கோப்பை வென்றது. அதன் பின் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை இந்திய அணி முத்தமிட்டுள்ளது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த நாடே கொண்டாடியது. ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மகத்தான சாதனை படைத்த இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. நாடு திரும்பும் இந்திய அணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கிடையே, பார்படாசில் சூறாவளி காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், இந்திய அணி உடனடியாக நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு சூழ்நிலை சுமுகமானதை அடுத்து இந்திய அணி வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், அணி நிர்வாகிகள் என சுமார் 70 பேர் கொண்ட குழுவினர் பார்படாசில் இருந்து தனி விமானத்தில் 16 மணி நேரம் பயணித்து ேநற்று காலை 6 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தனர். விமான நிலையத்தில் அதிகாலை முதலே திரண்டிருந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விமானநிலையத்திலேயே கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட், கோஹ்லி உள்ளிட்ட வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

பின்னர் இந்திய அணியினர் நட்சத்திர விடுதியில் சிறிய ஓய்வுக்குப் பிறகு, பிரதமர் மோடியை சந்திக்க அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சென்றனர். அங்கு உலகக் கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாக வரவேற்ற மோடி ஒட்டுமொத்த அணியையும் பாராட்டினார். உலகக் கோப்பை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த வீரர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார். பின்னர் வீரர்களுடன் கலந்துரையாடி, ஒவ்வொரு வீரரிடம் அவர்களது அனுபவங்களை கேட்டறிந்தார். கூடவே இந்திய அணி பெற்ற அபார வெற்றிக்காக தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பிரதமர் தெரிவித்தார். அப்போது பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் ஜெய் ஷா, பொருளாளர் ஆஷிஷ் ஷெலர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதையடுத்து, மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெற்றி விழாவில் பங்கேற்க தனி விமானம் மூலம் வீரர்கள் மும்பை புறப்பட்டு சென்றனர். மும்பை விமான நிலையத்தில் வீரர்கள் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் அடித்து மரியாதையான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வீரர்கள் அலங்கரிக்கப்பட்ட 2 திறந்தவெளி பஸ்களில் மெரைன் டிரைவ் கடற்கரை சாலையில் இருந்து வான்கடே ஸ்டேடியம் வரை பிரமாண்ட வெற்றி ஊர்வலத்தில் பங்கேற்றனர். வீரர்களை வரவேற்க மெரைன் டிரைவ் பகுதியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளுடன் இந்திய அணிக்கு வரலாறு காணாத வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலென திரண்ட ரசிகர்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களிடம் இந்திய வீரர்கள் உலகக் கோப்பை காட்டி, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றி ஊர்வலத்தால் மும்பையே அதிர்ந்தது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கிய வெற்றி ஊர்வலம், இரவு 9 மணி அளவில் வான்கடே ஸ்டேடியத்தை சென்றடைந்தது. அங்கு நடந்த வெற்றி விழாவில், பிசிசிஐ ஏற்கனவே அறிவித்தபடி, ரோகித் அண்ட் கோவுக்கு ரூ.125 கோடி ரொக்கப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா, ரன் மெஷின் விராட் கோஹ்லி, சுழற்பந்துவீச்சாளர் ஜடேஜா ஆகியோர் டி20ல் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். பயிற்சியாளராக டிராவிட் தனது பணியை நிறைவு செய்துள்ளார். வெற்றிக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக அவர்களுக்கும் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் பிரமாண்ட வெற்றி விழா மூலம் ரசிகர்கள் பதில் மரியாதை செய்துள்ளனர்.

உலகில் பல நாடுகளிலும் உலக கோப்பை வென்ற அணியை பாராட்ட வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் மும்பையில் குவிந்ததை போன்ற ரசிகர்கள் வெள்ளம் இதுவரை உலகமே கண்டிராத அதிசயம்.

2007லிலும் நடந்த வெற்றி ஊர்வலம்
இதுவரை இந்திய கிரிக்கெட் அணி 1983, 2007, 2011ம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. முதல் முறையாக பல சிரமங்களுக்கு மத்தியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ல் ஒருநாள் உலக கோப்பை தொடரில் வென்று நாடு திரும்பியது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இந்திய வீரர்களை வரவேற்று வாழ்த்தினார். பின்னர் அடுத்த உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு 24 ஆண்டுகள் தேவைப்பட்டது. 2007ல் டி20 உலக கோப்பை தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது. அப்போது தென் ஆப்ரிக்காவிலிருந்து வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு மும்பையில் இதே போல பிரமாண்டமான வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. வீரர்கள் திறந்த பஸ்சில் வான்கடே மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். 2011ல் சொந்த மண்ணில் உலக கோப்பை ஒருநாள் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றதைத் தொடர்ந்து மைதானத்திலேயே பிரமாண்ட விழா நடத்தப்பட்டது.

ரசிகர்களுக்கு இலவச அனுமதி
கிரிக்கெட் வீரர்களுக்கான வெற்றிப் பேரணியை தொடர்ந்து, வான்கடே ஸ்டேடியத்திற்குள் செல்ல கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்று இலவச அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 2, 3 மற்றும் 4 எண் நுழைவாயில்கள் மற்றும் பல்கலைக்கழக பகுதியில் இருந்த நுழைவாயில் வழியாக அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையொட்டி, மேற்கண்ட நுழைவாயில்கள் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டிருந்தன.

மாடல் கோப்பையுடன் வந்த ரசிகர்கள்
கிரிக்கெட் வீரர்களை வரவேற்கத் திரண்ட கூட்டத்தில் சிலர் டி20 உலகக் கோப்பையை போன்று வடிவமைக்கப்பட்ட மாதிரி கோப்பையை ஏந்தியபடி நின்றனர். சிலர், மும்பையில் காந்திவலியில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கோப்பையுடன் இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய வீரர்கள்
மேற்கிந்திய தீவுகளின் பார்படாசில் இருந்து இந்தியாவிற்கு நேரடி விமானங்கள் இல்லை. இதனால் ஏர் இந்தியா நிறுவனம் வீரர்களுக்காகவே நேரடி சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்திருந்தது. அந்த விமானம் பார்படாசின் கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு புறப்பட்டு 14,000 கிமீ இடைவிடாமல் பயணித்து டெல்லியை வந்தடைந்தது. பார்படாஸ், டெல்லி இடையே நேரடி விமானம் இல்லாததால் இதற்காக புதிய விமானப்பாதையும் உருவாக்கப்பட்டு அதில் வீரர்கள் பயணித்துள்ளனர்.

பிரமாண்டமான போயில் 777 விமானத்தில் வெறும் 70 பேர் மட்டுமே பயணித்ததால் எக்னாமி பிரிவு பகுதியில் வீரர்கள் வசதியாக படுத்துக் கொண்டு வந்தனர். விமானத்திலேயே வெற்றிக் கோப்பையுடன் வீரர்கள் விதவிதமான செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகின. மும்பை வெற்றிக் கொண்டாட்டம் மட்டுமின்றி இந்த விமானப் பயணமும் இந்திய அணி வீரர்களுக்கு மறக்க முடியாத நினைவாக மாறி உள்ளது.

கடல் அலையா… மனித தலையா?
மெரைன் டிரைவ் பகுதியில் பல லட்சம் மக்கள் குவிந்ததால், கடல் அலையா மக்கள் தலையா என்னும் அளவுக்கு அலைகடலென மக்கள் கூட்டம் காணப்பட்டது. கடும் கூட்ட நெரிசல் இருந்தபோதும், சாதனை படைத்த வீரர்களை காண ரசிகர்கள் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர். திறந்த வெளி பஸ்சில் வீரர்கள் வரும் வழியில் கூடியிருந் ரசிகர்கள், வீரர்கள் தங்களை கடந்தபோது உற்சாகமாக கையசைத்தும், ஆரவாரித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சில இடங்களில் மரத்தின் மீது ஏறி நின்றபடி ரசிகர்கள் வீரர்களை நோக்கி கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

வெற்றி முழக்கமிட்ட ரசிகர்கள்
மெரைன் டிரைவ் மூலம் வான்கடே ஸ்டேடியம் வரையிலும் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் நீல நிற ஜெர்சியை அணிந்தும் மூவர்ண கொடியுடனும் வெற்றி முழக்கமிட்டபடி இருந்தனர். பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் என்றும் இந்தியா, இந்தியா என்றும் அவர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்த வெற்றி ஊர்வலத்திற்காக அப்பகுதியில் மாலை 4.45 மணிக்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ரயில்களில் நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டம்
வான்கடே ஸ்டேடியம் அருகிலும், ஸ்டேடியம் நோக்கி செல்லும் சில சாலைகளிலும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. என்.எஸ். சாலை, நாரிமன் சாலை, மேடம் காமா சாலை , மகரிஷி கார்வே சாலை ஆகியவற்றில் வாகனங்கள் வர அனுமதி இல்லை. பேரவை கூட்டத்தொடர் நடந்ததால் விதான் பவன் செல்லும் சாலைகளில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனால், புறநகர் ரயில்களில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சர்ச்கேட், மெரைன்லைன், சார்னி ரோடு, மும்பை சென்ட்ரல், லோயர் பரேல், பிரபாதேவி, மாகிம் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கொட்டும் மழையிலும்…
கிரிக்கெட் வீரர்களை வரவேற்க மெரைன் டிரைவில் பல லட்சம் கிரிக்கெட் ரசிகர்கள் பிற்பகலில் இருந்தே குவியத் தொடங்கினர். வழியெங்கும் ரசிகர்கள் கூடியிருந்த நிலையில், மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக திட்டமிட்டதை விட தாமதமாக வீரர்கள் புறப்பட்டனர். கொட்டும் மழையிலும் வீரர்களை வரவேற்க ரசிகர்கள் காத்திருந்தனர். சிலர் குடை பிடித்தபடி நின்றிருந்தனர்.

The post டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள் appeared first on Dinakaran.

Related Stories: