ஓடாத ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து மோசடி

திருவெறும்பூர்: திருச்சி அடுத்த திருவெறும்பூர் பிரகாஷ் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உமா ராமசாமி (75). இவர், வரும் 5ம் தேதி திருச்சியில் இருந்து பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் செல்வதற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அருகில் உள்ள ஆன்லைன் சென்டருக்கு நேற்று சென்றார். அப்போது ஆன்லைனில் அவரது பயணத்திற்காக ரயில்களில் விவரம் தேடிய போது வண்டி எண்: 22498, SGNR HUMSAFAR என்ற ரயிலில் 3ம் வகுப்பு ஏசி பெட்டியில் இருக்கைகள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து உமா ராமசாமி டிக்கெட் முன்பதிவு செய்தார். அவருக்கு முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட்டு B9 பெட்டியில், 9ம் நம்பர் லோயர் பெர்த் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக வரி உட்பட ரூ.875 அவர் செலுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்த 15 நிமிடத்தில் அவரது டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதாகவும், பிடித்தம் போக மீதி ரூ.650 உங்களது வங்கி கணக்கில் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் செலுத்தப்படும் எனவும் குறுந்தகவல் வந்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த உமா ராமசாமி, ரயில்வே விசாரணை எண் 139க்கு தொடர்பு கொண்டு பேசினார்.அப்போது புக்கிங் செய்த தேதியில் அந்த ரயில் இல்லை என கூறியுள்ளனர். தொடர்ந்து உமா ராமசாமி தனது செல்போனில் முன்பதிவு செய்த ரயிலில் இருக்கைகள் குறித்த விவரத்தை பார்த்தபோது அதில் இருக்கைகள் இருப்பதாக காண்பித்தது.

இதுகுறித்து உமாராமசாமி கூறுகையில், ‘டிக்கெட் முன்பதிவு தானாக ரத்து செய்யப்பட்டதால் தமக்கு ரூ.200 இழப்பீடு ஏற்பட்டதுடன் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இதுபோன்ற குளறுபடிகள் நடக்கிறது. இதற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்று மோசடி நடப்பதை தடுக்க வேண்டும். எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் செலுத்திய முழு தொகையை ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்’ என்றார்

The post ஓடாத ரயிலுக்கு டிக்கெட் புக் செய்து மோசடி appeared first on Dinakaran.

Related Stories: