ஆவடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 5 சவரன் நகையை கொள்ளையடித்தவர் கைது

ஆவடி: பெரம்பூர் லோகோ பகுதியைச் சேர்ந்த காயத்ரி(33). திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறையில் பேச்சு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் 28ம் தேதி காலை காயத்ரி குன்றத்தூரில் உள்ள தந்தை வீட்டிற்கு செல்ல பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கு வந்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை செல்லும் மின்சார ரயிலின் மகளிர் பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரயில் பெட்டியில் ஒருசில பயணிகள் மட்டுமே இருந்த நிலையில், அண்ணனூர் ரயில் நிலையத்தில் அனைத்து பெண் பயணிகளும் இறங்கிவிட்டனர். காயத்ரி மட்டும் தனது குழந்தையுடன் இருந்தார். இதனை நோட்டம் விட்ட மர்ம நபர் ரயில் புறப்படும் நேரத்தில் ஓடிவந்து மகளிர் பெட்டியில் ஏறினார்.

பின்னர், கத்தி முனையில் காய்த்ரியை மிரட்டி 5 சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச் சென்றார். இதுகுறித்து காயத்ரி ஆவடி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெரம்பூர் ரயில்வே இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு எஸ்ஐ ஆறுமுகம் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் 5 சவரன் நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் சம்பந்தப்பட்ட மாங்காடு பகுதியைச் சேர்ந்த மாபாட்ஷா(38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். 5 சவரன் நகைகள் மற்றும் ஒரு பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆவடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் 5 சவரன் நகையை கொள்ளையடித்தவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: