கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

திருவள்ளூர்: ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியத் தொகையுடன் கூடிய கடன் உதவி வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க ரூ.2,500 லஞ்சம் பெற்ற திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு,குறு தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டத்தில் தொழில் தொடங்க மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருவள்ளூர் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி(47) என்பவர் தனது புத்தகக் கடையை விரிவுபடுத்த கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட தொழில் மையத்தை அணுகி ரூ.5 லட்சம் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதில் ரூ.2 லட்சத்தை ஒன்றிய அரசின் மானியத் தொகையுடன் கடன் உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அவர் வங்கிக் கடன் பெற்றுள்ளார். இதனையடுத்து ஒன்றிய அரசு திட்டத்தில் வழங்கப்படும் மானியம் ரூ.50 ஆயிரம் பெறுவதற்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மாவட்ட தொழில் மையத்தை அணுகியும் இதுவரை அதனை தொழில் மைய அதிகாரிகள் வழங்காமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

மேலும் மானிய பணம் வேண்டுமென்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும் மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமார் குமாரசாமியிடம் கேட்டதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைத்த குமாரசாமி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின் பேரில் புகார்தாரர் குமாரசாமி, மாவட்ட தொழில் மைய உதவியாளர் சிவக்குமாரிடம் நேற்று ரசாயனம் தடவிய ரூ.2,500ஐ கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர் தமிழ் அரசி தலைமையிலான 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: