புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான நிலையில் 6ம் தேதி நேரில் சந்தித்து இருமாநில சொத்து பகிர்வு குறித்து பேசலாம்: தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

திருமலை: ஆந்திராவில் இருந்து கடந்த 2014ம் ஆண்டு பிரிந்து தெலங்கானா மாநிலம் உதயமானது. தற்போது 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இருமாநிலத்திற்கான சொத்துக்களை சுமூகமாக பிரித்துக்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தெலங்கானாவில் கடந்த 10 ஆண்டுகளாக சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சியும், ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக ஜெகன்மோகன் ஆட்சியும் இருந்து வந்தது. ஆனால் இருமாநிலங்களுக்குள் சில முரண்பாடுகள் இருந்ததால் சொத்துக்களை சரிசமமாக பிரித்துக்கொள்வதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டிக்கு, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு நேற்றுமுன்தினம் இரவு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில மக்களின் நீடித்த முன்னேற்றம், நல்லுறவு ஆகியவை மேலும் வளரவேண்டும். மாநிலங்கள் பிரிந்து 10 ஆண்டுகள் ஆகிறது.

மாநில மறுசீரமைப்பு சட்டத்தில் உள்ள சொத்து பிரிவுகள் குறித்து நாம் இருவரும் நேரடியாக சந்தித்து தீர்த்துக்கொள்ள வேண்டும். எனவே வரும் 6ம் தேதி (சனிக்கிழமை) உங்களை நேரில் சந்திக்க ஐதராபாத் வர விரும்புகிறேன். நேருக்கு நேர் நடக்கும் நமது சந்திப்பின்போது இருமாநில அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துக்கொண்டு பரஸ்பர முன்னேற்றம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வரவேற்றுள்ளார்.

The post புதிய மாநிலம் பிரிந்து 10 ஆண்டுகளான நிலையில் 6ம் தேதி நேரில் சந்தித்து இருமாநில சொத்து பகிர்வு குறித்து பேசலாம்: தெலங்கானா முதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: